கொல்கத்தா அணியின் புதிய தலைவராக ஸ்ரேயாஸ் அய்யர்

Indian Premier League 2022

127
BCCI

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைவராக இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம், கடந்த 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இம்முறை சீசனில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன.

இதனிடையே, இம்முறை ஏலத்தின் போது ஸ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடிக்கு வாங்கியது. இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தவைராக ஸ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணி நிர்வாகம் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரர் இயென் மோர்கன் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் புதிய தலைவரை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்ரேயாஸ் அய்யரை வெற்றிகரமாக ஏலம் எடுத்ததில் முதலில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கொல்கத்தா அணியை வழிநடத்தும் வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு யாரும் மாற்றுக்கருத்து இல்லை. ஸ்ரேயாஸ் தரமான துடுப்பாட்ட வீரர் மட்டுமல்ல, தலைவராகவும் சிறந்து விளங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து வெளியிடுகையில்,

கொல்கத்தா போன்ற மதிப்புமிக்க அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐ.பி.எல் ஒரு போட்டியாக பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. அப்படி இணைந்த பல்வேறு திறமையான நபர்கள் அடங்கிய கொல்கத்தா அணியை வழிநடத்துவதை எதிர்நோக்கி உள்ளேன். எனக்கு வாய்ப்பளித்த கொல்கத்தா அணி உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் ஈடன் கார்டன் மைதானம் மிகப்பெரிய வரலாற்றை கொண்டுள்ளன. அந்த வரலாற்றில் நானும் பங்குபெறப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு தலைவராக செயல்பட்டிருந்ததுடன், 2020ஆம் ஆண்டு அவரது தலைமையிலான டெல்லி அணி, ஐ.பி.எல் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இவை இரண்டுமே முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் தலைமையில் வென்றவை.

எனினும், கடந்த ஆண்டு இயென் மோர்கன் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி வெளியேறியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<