IPL மெகா ஏலத்தில் விலைபோகாத நட்சத்திர வீரர்கள்

Indian Premier League 2022

217

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 15ஆவது பருவத்திற்கான மெகா ஏலம் கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.   

இந்த முறை IPL ஏலத்தில் மொத்தம் 204 வீரர்கள் வாங்கப்பட்டதுடன் 10 உரிமையாளர்களால் 551.70 கோடி ரூபா செலவிடப்பட்டது. இதில் இளம் வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே பலத்த போட்டி காணப்பட்டாலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக IPL போட்டிகளில் விளையாடி வந்த சில முன்னணி நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட வாங்குவதற்கு எந்தவொரு அணியும் முன்வரவில்லை.

>>IPL மெகா ஏலத்தில் கோடிகளை அள்ளிய வீரர்கள்

இதில் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சவ்லா, இஷாந்த் சர்மா, அமித் மிஷ்ரா, புஜாரா போன்ற இந்திய வீரர்களும், ஸ்டீவ் ஸ்மித், சகிப் அல் ஹசன், ஆடம் ஸாம்பா, மார்டின் கப்டில், இயென் மோர்கன் போன்ற வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

எனவே இந்த ஆண்டு IPL ஏலத்தில் விலைபோகாத நட்சத்திர வீரர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.

சுரேஷ் ரெய்னா (அடிப்படை விலை 2 கோடி)

IPL போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 5528 ஓட்டங்களுடன் 4ஆம் இடத்தில் உள்ள சுரேஷ் ரெய்னா, இதுவரை ஒரு சதமும் 39 அரைச்சதங்களும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், இம்முறை ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

அவர் தொடர்ந்து விளையாடி வந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. எனவே, IPL தொடரில் அதிக ஓட்டங்ள் உட்பட பல சாதனைகளை புரிந்த சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் ‘மிஸ்டர் IPL’ என்ற ஹேஷ்டேக்குடன் ரெய்னாவை எடுக்காத வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், சென்னை அணி நிர்வாகம் இதுதொடர்பில் கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் (அடிப்படை விலை 2 கோடி)

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தை இம்முறை IPL ஏலத்தில் வியக்கத்தக்க வகையில் யாரும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய போது அவர் ஓரளவு திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த பருவத்தில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 152 ஓட்டங்களை எடுத்தார்.

எனவே, அவரது ஒட்டுமொத்த அனுபவம் சில அணிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம். ஆனால், எந்தவொரு அணியும் அவரை வாங்குவதற்கு முன்வரவில்லை.

>>வனிந்து ஹஸரங்கவை 10.75 கோடிக்கு வாங்கியது RCB

சகிப் அல் ஹசன் (அடிப்படை விலை 2 கோடி)

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஐசிசியின் ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திலும், T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ள சகிப் அல் ஹசனை இம்முறை IPL மெகா ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் அவரது மோசமான ஆட்டம் தான் இம்முறை அவரை ஏலத்தில் வாங்காமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடிய வந்த சகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு IPL தொடரில் 8 போட்டிகளில் ஆடி 47 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் மட்டுமே பெற்றிருந்தார்.

ஆதில் ரஷீத் (அடிப்படை விலை 2 கோடி)

ஐசிசி இன் T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் முன்னணி சுழல்பந்துவீச்சாளர் தான் ஆதில் ரஷீத். T20i போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பிரதான பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்ற ஆதில் ரஷீதை, இம்முறை IPL மெகா ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை.

கடந்த ஆண்டு IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ஆதில் ரஷீத், ஒரேயொரு போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் தாஹிர் (அடிப்படை விலை 2 கோடி)

தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிரையும் இம்முறை IPL ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை.

42 வயதான இவர், உலகின் முன்னணி லீக் தொடர்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவர். சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம்வந்த இம்ரான் தாஹிர், கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

>>கொல்கத்தா அணியின் புதிய தலைவராக ஸ்ரேயாஸ் அய்யர்

ஆரோன் பின்ச் (அடிப்படை விலை 1.50 கோடி)

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20i அணித்தலைவரான ஆரோன் பின்ச், கடந்த காலங்களில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. இதனால் இம்முறை IPL தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு IPL தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், 12 போட்டிகளில் ஆடி 268 ஓட்டங்களை எடுத்தார். ஆனால், அவர் கடந்த ஆண்டு IPL ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டதுடன், எந்தவொரு அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.

டாவிட் மலான் (அடிப்படை விலை 1.50 கோடி)

ஐசிசி இன் T20i துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரும், தற்போது 5ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டவருமான டாவிட் மலான், அண்மைக்காலங்களில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக வலம்வந்த அவர், கடந்த ஆண்டு IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பலத்த எதிர்பார்ப்பு மற்றும் ஆரவாரத்திற்கு மத்தியில் இணைந்தார். ஆனால் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய அவருக்கு 26 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இயென் மோர்கன் (அடிப்படை விலை 1.50 கோடி)

கடந்த ஆண்டு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் தான் இயென் மோர்கன். சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தத் தொடரை பொறுத்தமட்டில் இயென் மோர்கனின் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தாலும், அவரால் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

இதன்காரணமாக அவரை இம்முறை IPL ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை.

>>மஹீஷ் தீக்ஷனவை வாங்கிய சென்னை ; லக்னோ அணியில் சமீர!

கிறிஸ் லின் (அடிப்படை விலை 1.50 கோடி)

அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிறிஸ் லின், பிக் பாஷ் லீக்கில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக IPL தொடரில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க வீரராக இடம்பிடித்தார். எனினும், IPL தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.

கடந்த ஆண்டு IPL தொடருக்கு முன்னதாக 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் அவர் வாங்கப்பட்டார். ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு மெகா ஏலத்தில் கிறிஸ் லின்னுக்கு ஏதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு இம்முறை IPL வாய்ப்பு கிட்டவில்லை.

தப்ரைஸ் ஷம்ஸி (அடிப்படை விலை 1 கோடி)

T20i பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு மீண்டும் முதலிடத்திற்கு முன்ளேறியவர் தான் தென்னாபிரிக்காவின் சுழல் நட்சத்திரம் தப்ரைஸ் ஷம்ஸி.

சர்வதேசப் போட்டிகளில் அவர் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தபோதிலும், இம்முறை ஏலத்தில் IPL அணிகள் எதுவும் அவரை வாங்குவதற்கு ஆர்வத்தைக் காட்டவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<