ஆசிய ஹொக்கி கிண்ணத்தில் 19 கோல்கள் அடித்து அசத்திய இலங்கை மகளிர் அணி

156
19 Goals for AHF SL Hockey Women

ஆசிய ஹொக்கி சம்மேளனத்தின் நான்காவது ஆசிய ஹொக்கி கிண்ணப் போட்டிகளுக்காக தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை மகளிர் ஹொக்கி அணி, இந்தோனேசிய மகளிர் அணியுடனான போட்டியில் 19 கோல்கள் அடித்து அசத்தி தமது குழுவில் முதல் இடத்தை பிடித்தது.

முன் வரிசை மற்றும் நடு வரிசை வீராங்கனைகளின் மிகச் சிறந்த திறமையால் இலங்கை மகளிர் ஹொக்கி அணி இந்தோனேசிய மகளிர் அணியை மிக இலகுவாக வென்றது. நடு வரிசை வீராங்கனையான சத்துரிக்கா விஜேசூரிய 5 பெனால்டி கோர்னர், 1 பெனால்டி கோல் மற்றும் 3 சாதாரண கோல் உள்ளடங்களாக மொத்தம் 9 கோல்களை அடித்து அசத்தினார்.

அவருக்கு துணையாக இமேஷா வீரபாகு 5 கோல்களையும், நயனா ஜயனேத்தி  ஹட்ரிக் முறையில் 3 கோள்களையும் அடித்து இலங்கை அணி 19 கோல்கள்  எனும் பெரிய இலக்கை அடைய உதவினர். கீதிகா கங்கேதுர மற்றும் சத்துரிக்கா பனவல ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து தமது பங்களிப்பையும் அணிக்காக வழங்கினர்.

2016ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தில், ஒக்டொபர் 1ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் உஸ்பகிஸ்தான் அணியுடன் மோதிய இலங்கை அணி, சத்துரிக்கா விஜேசூரியவின் ஹட்ரிக் கோல்களின் உதவியுடன் போட்டியை இலகுவாக வென்றது. குறித்த போட்டியில் உஸ்பகிஸ்தான் அணி, முதலாவது கோல் அடித்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், சிறப்பாக விளையாடிய இங்கை அணி பின்னர் 3 கோல்களை அடித்து போட்டியை 3-1 என்று வென்றது.

மொத்தமாக 9 நாடுகள் இப்போட்டிகளில் பங்குகொள்கின்றன.  இலங்கை அணி தாய்லாந்து, சைனீஸ் தாய்பேய், இந்தோனேசியா, உஸ்பகிஸ்தான் அணிகளுடன் குழு A இல் அங்கம் வகிக்கின்றது. இலங்கை அணி 6 புள்ளிகளுடன் குழு A இல் முதல் இடத்தில் காணப்படுவதோடு, சைனீஸ் தாய்பேய் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளைப் பெற்று 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் காணப்படுகின்றன.

இலங்கை அணி தாய்லாந்து அணியை இன்று (5) தாய்லாந்து நேரப்படி பி..7 மணிக்கு சந்திக்க உள்ளதோடு, நாளை 6ஆம் திகதி பி.. 5 மணிக்கு சைனீஸ் தாய்பேய் அணியுடன் மோதவுள்ளது. இந்த முதல் சுற்றின் முடிவில் குழுவில் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும்.

அடுத்து நடைபெற உள்ள ஆசிய மகளிர் ஹொக்கி கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டியாகவும், 2018ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள உலக கிண்ணத்திற்கான தகுதிகான் போட்டியாகவும் இந்தப் போட்டிகள் அமைகின்றன. இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் முதல் இரண்டு அணிகள், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆசிய மகளிர் ஹொக்கி கிண்ணத்திற்காக தெரிவாகும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஹொக்கி சம்மேளனத்திற்கும், இலங்கை விளையாட்டு அமைச்சிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கை மகளிர் ஹொக்கி அணி தாய்லாந்துக்கு விஜயம் செய்வதில் தடங்கள் ஏற்பட்டாலும், இறுதி நேரத்தில் அனைத்து   பிரச்சினைகளும் தீர்க்கப்பட்ட நிலையில் அவ்வணி தாய்லாந்து நோக்கி புறப்பட்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.