IPL மெகா ஏலத்தில் கோடிகளை அள்ளிய வீரர்கள்

Indian Premier League 2022

278

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022ஆம் ஆண்டுக்கான வீரர்கள் மெகா ஏலம் வார இறுதியில் பெங்களூருவில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இம்முறை மெகா ஏலத்தில் பல முன்னணி வீரர்களை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், இளம் வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கி குவித்தன.

15ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் மேலதிகமாக லக்னோ சுபர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன.

எனவே, 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். எனவே, இம்முறை மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே ஏலத்தில் போட்டியிட தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கடைசி நாளில் அண்மையில் நிறைவுக்கு வந்த 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது.

மேலும், 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 377 இந்திய வீரர்களும், 253 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

>>வனிந்து ஹஸரங்கவை 10.75 கோடிக்கு வாங்கியது RCB

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றுமுன்தினம் (12) ஆரம்பமாகியது.

முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில் 74 வீரர்கள் 388.35 கோடிக்கு ஏலம் போனார்கள். இதில் 41 வீரர்கள் சர்வதேசப் போட்டியில் விளையாடிவர்கள். 33 பேர் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

அதேபோல, இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். மொத்தமாக 550 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுபர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மட்டும் தலா 25 வீரர்களை தங்களது அணியில் வைத்துள்ளன.

இதனிடையே, இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்களாக மாறினார்கள். 7.5 கோடியில் இருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு 25 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

அதிலும் குறிப்பாக, ஐ.பி.எல் ஏலத்தில் எந்த முறையும் இல்லாத வகையில் இம்முறை ஏலத்தில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட முதல் 10 வீரர்களில் 6 பேர் வேகப் பந்துவீச்சாளர்கள் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க, இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா மற்றும் நியூசிலாந்தின் லுக்கி பெர்குசன் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவானை 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

>>மஹீஷ் தீக்ஷனவை வாங்கிய சென்னை ; லக்னோ அணியில் சமீர!

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அதிக தொகையான 15.25 கோடிக்கு ஏலம் போன இளம் வீரரான இஷான் கிஷனை எடுக்க கடுமையான போட்டி நிலவியது. மும்பை அணியில் விளையாடும் அவரை தக்க வைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அந்த அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி இஷான் கிஷனுக்காக முதலில் போட்டி போட்டது. 8 கோடி வரை போட்டிக்கு வந்தது. பின்னர் அந்த அணி விலக குஜராத் அணி மும்பையிடம் போட்டியிட்டது. 12.75 கோடி வரைக்கும் குஜராத் அணி போட்டியிட்டது.

பின்னர் மும்பையுடன் போட்டி போட முடியாமல் அந்த அணி விலகி கொள்ள ஹைதராபாத் களத்தில் குதித்தது. ஹைதராபாத் அணி 15 கோடி வரை கொடுக்க முன்வந்தது. ஆனால் இறுதியில் மும்பை 15.25 கோடி கொடுத்து தக்க வைத்துக் கொண்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வீரராக யுவராஜ் சிங் (16 கோடி, டெல்லி அணி, 2015ஆம் ஆண்டு) திகழ்கிறார். அவருக்கு அடுத்த இடத்தை இஷான் கிஷன் தற்போது இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, இஷான் கிஷனுக்கு அடுத்தபடியாக தீபக் சாஹர் 14 கோடிக்கும் (சென்னை), ஸ்ரேயாஸ் அய்யர் 12.25 கோடிக்கும் (கொல்கத்தா) ஏலம் போனார்கள்.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை 14 கோடி கொடுத்து சென்னை சுபர் கிங்ஸ் அணி எடுத்தது. அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

கடந்த சீசனில் சென்னை அணியில் ஆடிய தீபக் சாஹரை இந்த முறை வாங்க டெல்லி, ராஜஸ்தான் அணிகள் கடுமையாக முயற்சித்தன. இறுதியாக சென்னை அணி அவரை அதிக தொகை எடுத்து தக்க வைத்துக் கொண்டது.

>>சாமிக்க கருணாரத்னவை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மற்ற வேகப்பந்து வீரர்களான ஷர்துல் தாகூர் (டெல்லி) 10.75 கோடிக்கும், ஹர்ஷல் படேல் (பெங்களுர்) ரூ.10.75 கோடிக்கும், வனிந்து ஹஸரங்க (பெங்களுர்) 10.25 கோடிக்கும், பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான்) 10 கோடிக்கும், லுக்கி பெர்குசன் (குஜராத்) ரூ.10 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்தியாவின் மற்றொரு வேகப்பந்து வீரரான அவேஷ்கானை லக்னோ அணி 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்கு போன சர்வதேச போட்டியில் விளையாடதா வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக 16 ஆட்டத்தில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதனிடையே, இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரராக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் லியாம் லிவிங்ஸ்டன் இடம்பிடித்தார்.

லியாம் லிவிங்ஸ்டனைத் வாங்க கடும் போட்டி நிலவியது. 11 கோடியைத் தாண்டிய பிறகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே போட்டி இருந்தது. இறுதியில் 11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி லிவிங்ஸ்டனை ஏலத்தில் எடுத்தது.

இதேவேளை, 7.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலைப் பொறுத்தமட்டில் நிகொலஸ் பூரன் (மும்பை) 15.25 கோடிக்கும், கங்கிஸோ ரபாடா (பஞ்சாப்) ரூ.9.25 கோடிக்கும், ஷாருக் கான் (பஞ்சாப்) 9 கோடிக்கும், ஜேசன் ஹோல்டர் (லக்னோ) 8.75 கோடிக்கும், ட்ரென்ட் போல்ட் (ராஜஸ்தான்) ரூ.8 கோடிக்கும், ஜொப்ரா ஆர்ச்சர் (மும்பை) 8 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

>>பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுக ராஜபக்ஷ

அத்துடன், அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட்டை 7.75 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வாங்கியது அதேபோல, லக்னோ அணி இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டை 7.5 கோடிக்கு வாங்கியது.

அதேபோல, வொஷிங்டன் சுந்தர் (8.75 கோடி, ஹைதராபாத்), சகலதுறை வீரர் ராகுல் திவேதியா (9 கோடி, குஜராத் ), மற்றும் ராகுல் திரிபாதி (8.25 கோடி, ஹைதராபாத்), ஷிகர் தவான் (8.50 கோடி, பஞ்சாப்), குர்ணால் பாண்ட்யா (8.25 கோடி, லக்னோ), நிதிஷ் ராணா (8 கோடி, கொல்கத்தா), ஷிம்ரோன் ஹெட்மெய்ர் (8.50 கோடி, டெல்லி), தேவ்தத் படிக்கல் (7.75 கோடி, ராஜஸ்தான்), ஷிவம் மாவி (7.25 கோடி, கொல்கத்தா) ஆகிய வீரர்களின் விலையும் மில்லியன் டொலரை கடந்து வியப்பில் ஆழ்த்தின.

இதேவேளை, அவுஸ்திரேலியா வீரர் பெட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது. சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த அவுஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வோர்னரை டெல்லி அணி 6.25 கோடிக்கு வாங்கியது.

சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த பாப் டு பிளெசிஸ் 7 கோடிக்கு ஏலம் போனார். இவரை ஏலம் எடுப்பதில் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களுரு அணி இவரை வாங்கியது. அதேபோல, தென்னாபிரிக்க அணி வீரரும், விக்கெட் காப்பாளருமான குயின்டன் டி கொக் 6.75 கோடிக்கு ஏலம் போனார். இவரை புதிய அணியான லக்னோ சுபர் ஜெயண்ட் வாங்கியது.

இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை.

சென்னை அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புஜாரா, தென்னாபிரிக்காவின் சுழல் பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸி, இம்ரான் தாஹிர், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஆடம் ஜாம்பா, இங்கிலாந்தின் டாவிட் மலான், இயென் மோர்கன், ஆடில் ரஷீட், பங்காளதேஷின் சகிப் அல் ஹசன், மற்றும் ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<