இம்முறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர்

1660

இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் 2018ஆம் ஆண்டுக்கான போட்டிகள், எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இன்று (18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018

இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து…

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் 13ஆவது தடவையாக இடம்பெறவுள்ள இம்முறை தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, இம்முறை யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள ஆரம்பப் போட்டியில் கடந்த முறை DCL தொடரில் மூன்றாம் இடம் பெற்ற வென்னப்புவ நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்ற பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழக அணிகள் மோதவுள்ளன.

கடந்த முறை போன்றே, 18 அணிகள் பங்கு கொள்ளும் இம்முறை தொடரில் இரண்டு அணிகள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் இரண்டு அணிகள் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக இடம்பெற்ற பிரிவு இரண்டு சுற்றுத் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்ற ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடம்பெற்ற இலங்கையின் பழைமையான கழகங்களில் ஒன்றான ரட்னம் விளையாட்டுக் கழகமும் இம்முறை இலங்கையின் முன்னணி தொடரில் இணைகின்றன.

அதேவேளை, கடந்த முறை DCL தொடரில் இறுதி 2 இடங்களையும் பெற்ற மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் என்பன இம்முறை தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

Photos: Dialog Champions League 2018 | Press Briefing

ThePapare.com | Hiran Weerakkody | 18/10/2018..

இம்முறை தொடரில், 18 அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். எனவே, 17 வாரங்களுக்கு லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று, அடுத்த வருடம் ஜனவரி மாத்திற்குள் இந்த தொடரை முழுமையாக நடாத்தி முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

மொத்தமாக 153 மோதல்கள் இடம்பெறவுள்ள இந்த பருவகாலப் போட்டிகளுக்காக 60 போட்டி மத்தியஸ்தர்களும், 30 போட்டி ஆணையாளர்களும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து அணியின் தலைவர் ரௌமி மொஹிடீன் வெற்றிக் கிண்ணத்தை FFSL இடம் கையளிக்கும்பொழுது

மேலும், 1997 அல்லது அதற்கு பின்னர் பிறந்த 6 வீரர்கள் அனைத்து அணிகளது குழாம்களிலும் உள்வாங்கப்பட வேண்டும். அதேவேளை, அதில் ஒரு வீரர் முதல் பதினொருவரில் கட்டாயம் விளையாட வேண்டும். அதேபோன்று, கடந்த பருவங்களைப் போன்று 3 வெளிநாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாட முடியும்.  

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் இரண்டாம் வாரப் போட்டிகள் ஆரம்பம்

இலங்கை பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில்…

அதேவேளை, ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) கழகங்களுக்கான சான்றிதழ் செயற்திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் (Club License Program) இலங்கை இராணுவப்படை அணி பாதுகாப்பு படை விளையாட்டுக் கழகம் (Defenders SC) என்ற பெயரிலும் இலங்கை கடற்படை அணி கடற் குதிரைகள் (Sea Horses SC) என்ற பெயரிலும் இம்முறை தொடரில் களம் காணவுள்ளன.

கடந்த 3 பருவங்களாக தொடர்ச்சியாக கொழும்பு கால்பந்துக் கழகமே டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் கிண்ணத்தை வென்றுள்ளது. எனவே, இம்முறை ஒரு புதிய அணி கிண்ணத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இலங்கை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையிலேயே இந்த பிரபல தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் மற்றும் சுபர் சன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டியை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com நேரடியாக ஒளிபரப்ப உள்ளது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<