அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது

Indian Premier League 2022

2202
Gujarat Titans

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று (09) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த மாத இறுதியில் IPL தொடரின் 15ஆவது பருவம் நடைபெறவுள்ளதுடன், இதற்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

அதன்படி ஏற்கனவே விளையாடி வரும் 8 அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் புதிதாக இந்த ஆண்டு IPL தொடரில் இணைந்துள்ளன.

அந்த வகையில், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ என பெயரிடப்பட்டு அந்த அணியின் இலச்சினையும் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணியின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அஹமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக அகமதாபாத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது குஜராத் டைட்டன்ஸ் என உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அகமதாபாத் அணியின் உரிமையை CVC கேபிடல் பார்ட்னர்ஸ் குழுமம் பெற்றுக்கொண்டதுடன், அந்த அணியின் தலைவராக இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, IPL மெகா ஏலத்துக்கு முன் அஹமதாபாத் அணி, ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரஷித் கானையும், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்லையும் தமது அணிக்காக தேர்வு செய்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அகமதாபாத் தலைமைப் பயிற்சியாளராகவும், விக்ரம் சோலங்கி அந்த அணியின் இயக்குனராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அகமதாபாத் அணியின் ஆலோசகராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<