2022 IPL இல் வெவ்வேறு குழுவில் சென்னை, மும்பை அணிகள்

294
IPL new format

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 15ஆவது அத்தியாயம் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணை, மைதானங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பிசிசிஐ மற்றும் IPL நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.

இம்முறை ஐ.பி.எல் தொடர் குறித்த முக்கிய தீர்மானங்கள் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகின்ற ஐ.பி.எல் தொடரின் 15ஆவது அத்தியாயம் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் மே மாதம் 29ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் உள்ள நான்கு மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படும். பிளே-ஆப் போட்டிகளுக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், அந்த அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Round Robin முறைப்படி போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த இரண்டு குழுக்களையும் சம்பியன் பட்டங்கள் வென்றதை வைத்தும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை வைத்தும் வரிசையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் A குழுவிலும், நான்கு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி B குழுவிலும் இடம்பெற்றுள்ளது.

A குழுவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சுபர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, B குழுவில் நடப்பு சம்பியனான சென்னை சுபர் கிங்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஒரு குழுவில் இருக்கும் அணி, அதே குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அடுத்து, குழு A குழுவில் இருக்கும் அணி, அதற்கு நேராக குழு B குழுவில் இடம்பெற்றிருக்கும் அணிக்கு எதிராக இரண்டுமுறை மோதும். இதனைத் தொடர்ந்து மற்ற குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒருமுறை மோதும். இதன்மூலம் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் மோதவுள்ளது.

உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி, தனது குழுவில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 2 முறை மோதும். அடுத்து, அதற்கு நேர் எதிராக குழு B இல் உள்ள சென்னை அணியுடன் 2 முறையும் மோதும். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

எனவே, 2011ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரைப் போன்று தான் இம்முறையும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<