லா லீகாவில் பார்சிலோனா, ரியல் மெட்ரிட் கடும் போட்டி: செல்சி தொடர்ந்து 6ஆவது வெற்றி

64

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லீகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடரின் முக்கிய போட்டிகள் சில சனிக்கிழமை (9) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.

பார்சிலோனா எதிர் செல்டா விகோ

லியோனல் மெஸ்ஸியின் இரு அபார ப்ரீ கிக்குகள் உட்பட ஹெட்ரிக் கோல் மூலம் செல்டா விகோ அணியை 4-1 என தோற்கடித்த பார்சிலோனா லா லீகாவில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 

இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த யெமன்

யெமன் அணிக்கு எதிராக இடம்பெற்ற 19….

கேம்ப் நூவில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் பெனால்டி உதை மூலம் மெஸ்ஸி கோல் பெற்றார். ஜூனியர் பயர்போ பரிமாற்றிய பந்து பெனால்டி பகுதிக்குள் ஜோசப் ஐரூவின் கைகளில் பட்டதாலேயே 28 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு அந்த ஸ்பொட் கிக் கிடைத்தது. 

எனினும் லூகாஸ் ஒலாசாவின் ப்ரீ கிக் உதவியோடு செல்டா விகோ அணி பதில் கோல் திருப்பியது. எனினும் மெஸ்ஸி நான்கு நிமிடங்கள் கழித்து அதேபோன்ற ஒரு முயற்சியில் கோல் ஒன்றை போட்டார். 

முதல் பாதியில் பார்சிலோனா 2-1 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது பாதியில் மீண்டும் செயற்பட்ட மெஸ்ஸி மற்றொரு ப்ரீ கிக் மூலம் கோலை பெற்றார். தொடர்ந்து 85 ஆவது நிமிடத்தில் செர்ஜியோ புஸ்குட்ஸ் (Sergio Busquets) பார்சிலோனா சார்பில் நான்காவது கோலை புகுத்தினார்.   

இதன் மூலம் கோல் வித்தியாசத்தில் பார்சிலோனா முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. எனினும் அந்த அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுடன் 25 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி எல் கிளசிகோ (El Clásico) போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ரியல் மெட்ரிட் எதிர் எய்பர்

எய்பர் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ரியல் மெட்ரிட் அணி லா லீகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்காக பார்சிலோனாவுக்கு கடும் சவாலாக உள்ளது. 

கரிம் பென்சமா ரியல் மெட்ரிட்டுக்காக கோல் பெறுவதை ஆரம்பித்ததோடு செர்ஜியோ ராமோஸ் பெனால்டி உதை மூலம் ரியல் மெட்ரிட்டின் கோல் எண்ணிக்கையை அதிகரித்தார். இந்நிலையில் கரிம் பென்சமா மற்றொரு பெனால்டி கோலை பெற ரியல் மெட்ரிட் 29 ஆவது நிமிடத்திற்குள்ளேயே 3-0 என முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ரியல் மெட்ரிட் 61 ஆவது நிமிடத்தில் நான்காவது கோலையும் புகுத்தியது. அந்த கோலை பெடரிக்கோ வல்வர்டே (Federico Valverde) பெற்றார்.   


செல்சி எதிர் கிறிஸ்டல் பெளஸ்

கிறிஸ்டல் பெளஸ் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்த செல்சி அணி 2016-17 பருவத்தில் சம்பியனான பின் முதல் முறையாக ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை சுவைத்தது.  

துருக்கி கழகத்தை பந்தாடிய ரியல் மெட்ரிட்: சிட்டி, ஜுவன்டஸ், PSG அடுத்த சுற்றில்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின்…..

இந்த வெற்றியால் செல்சி கழகம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விடவும் ஐந்து புள்ளிகளால் மாத்திரமே பின்தங்கி இருப்பதோடு இரண்டாவது இடத்தில் இருக்கு லெய்செஸ்டருடன் புள்ளிகளை சமன் செய்துள்ளது.  

முதலாவது பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றபோதும் செல்சி அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே அந்த அணியால் கோல் போட முடிந்தது. 10 யார் தூரத்தில் இருந்து டெம்மி அப்ரஹாம் அந்த கோலை புகுத்தினார்.  

இந்நிலையில் தனது வெற்றியை உறுதி செய்யும் வகையில் கிறிஸ்டியன் பொலிசிக் 79ஆவது நிமிடத்தில் செல்சிக்காக இரண்டாவது கோலை புகுத்தினார். 


டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் ஷெபீல்ட் யுனைடட்

பரபரப்பான நடந்த ஷெபில்ட் அணியுடனான போட்டியை 1-1 என சமநிலை செய்த டொட்டன்ஹாம் ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றியின்றி பின்தள்ளப்பட்டுள்ளது. 

கடைசியாக கடந்த 28 ஆம் திகதி ப்ரீமியர் லீக்கில் வெற்றி ஒன்றை பெற்ற நிலையிலேயே டொட்டன்ஹாம் தனது சொந்த மைதானத்தில் ஷெபீல்ட் யுனைடட் அணியை எதிர்கொண்டது. 

போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியின் 58 ஆவது நிமிடத்தில் தென் கொரிய சர்வதேச வீரரான சொன் ஹியுங் மின் மூலம் டொட்டன்ஹாம் கோல் பெற்றது.  

இந்நிலையில் அடுத்த ஒருசில நிமிடத்தில் டேவிட் மக்கோல்ட்ரிக் பதில் கோல் திருப்பியபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.    

தொடர்ந்து 78 ஆவது நிமிடத்தில் ஷெபீல்ட் யுனைடட் சார்பில் ஜோர்ஜ் பேல்டொக் பெற்ற கோலும் வீடியோ நடுவர் உதவிக்குச் சென்றபோதும் அந்த கோல் உறுதி செய்யப்பட்டது.  


ஆர்சனல் எதிர் லெய்செஸ்டர் சிட்டி

கிங் பவர் அரங்கியில் நடைபெற்ற போட்டியில் சோபிக்கத் தவறிய ஆர்சனல் அணிக்கு எதிராக 2-0 என வெற்றி பெற்ற லெய்செஸ்டர் சிட்டி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.  

2015-16 ப்ரீமியர் லீக் சம்பியன் அணியான லெய்செஸ்டர் முதல் பாதியில் பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டதோடு இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் வில்பிரட் ந்டிடி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 

இந்நிலையில் 68 ஆவது நிமிடத்தில் ஜெம்மி வார்டி லெய்செஸ்டர் சார்பில் முதல் கோலை புகுத்தியதோடு 7 நிமிடங்கள் கழித்து அந்த அணி சார்பில் ஜேம்ஸ் மெடிசன் இரண்டாவது கோலை பெற்றார். 


பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் ப்ரெஸ்ட்

மவுரோ இகார்டி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் ப்ரெஸ்ட் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் 1 தொடரில் மீண்டும் வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது.  

கடந்த வாரம் டிஜோன் அணியிடம் தோல்வியை சந்தித்த PSG, டி மரியா மூலம் 39 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றது. எனினும் சாமுவேல் கிராண்ட்சிர் பதில் கோல் திருப்பியதால் கடைசி நேரம் ஆட்டம் விறுவிறுப்பானது. 

எனினும்  85 ஆவது நிமிடத்தில் ப்ரெஸ்ட் பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி மவுரோ இகார்டி PSG சார்பில் வெற்றி கோலைப் பெற்றார். நடப்புச் சம்பியனான PSG 13 போட்டிகளில் 10 இல் வெற்றியீட்டி லீக் 1 முதலிடத்தில் நீடிக்கிறது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<