T20I உலகக் கிண்ணம், ஆஷஷ் தொடர்களை தவறவிடும் ஆர்ச்சர்

England Cricket

154

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், 2021ஆம் ஆண்டு முழுவதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஜொப்ரா ஆர்ச்சரின் வலது முழங்கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவரால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணம் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள ஆஷஷ் தொடர்களில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து!

ஜொப்ரா ஆர்ச்சர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் குறித்த இந்த உபாதை காரணமாக போட்டிகளை தவறவிட்டதுடன் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தார்.

முழங்கை உபாதைக்கு பின்னர் சசெக்ஸ் அணிக்காக கௌண்டி போட்டியொன்றில் விளையாடிய போதும், அவரால் உபாதை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை. இதன் பின்னர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். 

ஜொப்ரா ஆர்ச்சரின் உபாதை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, “கடந்தவாரம் ஜொப்ரா ஆர்ச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரின் வலது முழங்கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போது நடைபெற்றுவரும் இந்திய தொடர், ஐசிசி T20 உலகக் கிண்ணம் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள ஆஷஷ் தொடர்களை தவறவிடுவார். 

குறிப்பாக வலது முழங்கை பகுதியில் உள்ள எலும்பு பகுதியொன்றை கடந்த மே மாதம் நீக்கவிட்டு, மீண்டும் கௌண்டி கிரிக்கெட்டுக்கு ஆர்ச்சர் திரும்பியிருந்தார். எனினும், உபாதையானது மீண்டும் தீவிரமடைந்ததால், அவரால் இந்த ஆண்டு முழுவதும் விளையாட முடியாது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜொப்ரா ஆர்ச்சர் அணியிலிருந்து வெளியேற்றப்படுவது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். குறிப்பாக ஐசிசி T20 உலகக் கிண்ணம் மற்றும் ஆஷஷ் தொடருக்கான தயார்படுத்தல்களில் இந்த விடயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், உளவியல் ரீதியாக தயாராகுவதற்காக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<