லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கான உத்தியோகபூர்வ திகதிகள் அறிவிப்பு

1165

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (2) உறுதி செய்திருக்கின்றது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக தடைப்பட்ட லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நடைபெறுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த காலப்பகுதியில் இலங்கை விமான நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் தொடரில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் இலங்கை வருவதில் சிக்கல்கள் உருவாகியிருந்தன. இதனால், ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் மீண்டும் பிற்போடப்பட்டது.

எல்.பி.எல். தொடரில் பங்கேற்கும் முதல் அணி அறிமுகம்

இவ்வாறு பிற்போடப்பட்டிருந்த லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரே, தற்போது நவம்பர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறவிருப்பதோடு, இலங்கையின் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன.

இதேநேரம், இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கவிருக்கும் முதல் அணியாக “காலி கிளாடியேட்டர்ஸ்” அணி இன்று (2) பாகிஸ்தானில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், இந்த அணியின் நட்சத்திர வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை குறித்த காலி கிளேடியேட்டர்ஸ் அணி, பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் ஆடும் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்

மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் சபை, இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரை இந்த ஆண்டு நடாத்துவதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அனுபவம் ஒன்றினை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<