முதல் ஓவரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து நியூசிலாந்து வீரர் சாதனை!

New Zealand tour of Ireland 2022

2942
Michael Bracewell

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வல், T20I கிரிக்கெட்டில் அவருடைய முதலாவது ஓவரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணியானது அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில், இரண்டாவது T20I போட்டி நேற்று (21) நடைபெற்றிருந்தது.

>> டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சறுக்கியது இலங்கை

இந்தப்போட்டியில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த நியூசிலாந்து அணியானது, 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

குறித்த இந்தப்போட்டியில் துடுப்பாட்ட வீரராகவும், பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராகவும் அணியில் செயற்படும் மைக்கல் பிரேஸ்வல், தன்னுடைய இரண்டாவது T20I போட்டியில் விளையாடினார். முதல் போட்டியில் இவர் ஓவர்களை வீசாத நிலையில், இந்த போட்டியில் முதன்முறையாக பந்துவீச அழைக்கப்பட்டார்.

அதிகமாக துடுப்பாட்ட வீரராக பார்க்கப்படும் இவர், அணியின் 14வது ஓவருக்காக அழைக்கப்பட்டதுடன் மார்க் அடைர், பெரி மெக்கார்த்தி மற்றும் கிரைக் யங் ஆகியோரை ஆட்டமிழக்கச்செய்து தன்னுடைய முதல் ஓவரிலேயே ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார். இவருடன் ஹெட்ரிக்குடன் அயர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 5 பந்துகளை மாத்திரமே இவர் வீசியிருந்தார்.

இதன்மூலம் T20I கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் ஓவரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டதுடன், நியூசிலாந்து அணிக்காக T20I ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துக்கொண்டார். இதற்கு முன்னர் ஜேகப் ஓரம் மற்றும் டிம் சௌதி ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக ஹெட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<