உள்ளக 800m போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார் இந்துனில் ஹேரத்

104

ஐந்தாவது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுத் தொடர் தற்போது துர்க்மெனிஸ்தானின் அஸ்கபாத் நகரில் இடம்பெற்று வருகின்றது. தொடரின் முதல் நாள் இடம்பெற்ற போட்டிகளின் நிறைவில் இலங்கையின் இந்துனில் ஹேரத் மற்றும் கயந்திகா அபேரத்ன முறையே ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உள்ளக 800m ஓட்டப் போட்டியின் முதற் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்றனர்.

ஐந்தாவது உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 21 இலங்கையர்

ஐந்தாவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் …

 

ஆண்களுக்கான 800m போட்டியின் முதல் தகுதிகாண் ஓட்டப் போட்டியை 1:53.79 வினாடிகளில் நிறைவு செய்த இந்துனில் ஹேரத் முதலித்தை பெற்றுக் கொண்டார். இவர் போட்டியின் முதல் 400m தூரத்தை கடக்க 55.89 வினாடிகள் எடுத்துக்கொண்ட போதிலும் இறுதி 400m தூரத்தை சிறப்பாக ஓடி போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

அவர் பதிவு செய்த நேரமானது இலங்கை வீரர் ஒருவரினால் உள்ளக 800m போட்டியொன்றில் பதிவு செய்யப்பட்ட சிறந்த நேர அடிப்படையாகும். அதன்படி குமார அமரசேகர தன்வசம் வைத்திருந்த சாதனையான 1:57.11 என்ற நேர அடிப்படையை இந்துனில் ஹேரத் தகர்த்து தன் பெயரை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் முதற் சுற்று தகுதிகாண் போட்டிகளின் நிறைவில் அரையிறுதிச் சுற்றுக்கு 12 வீரர்கள் தெரிவாகியுள்ளதுடன், அவர்களில் சிறந்த வேகத்திற்கான சொந்தக்காரராக இந்துனில் காணப்படுகின்றார். அவர் பங்குபற்றும் அரையிறுதிப் போட்டி நாளை (19) இலங்கை நேரப்படி மாலை 7.15 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பெண்களுக்கான 800m போட்டியில் தேசிய சாதனைக்கு உரிமை கோரும் கயந்திகா அபேரத்னவும் தனது தகுதிகாண் போட்டியை 2:12.93 வினாடிகளில் முடித்து முதலிடத்தை பெற்றார். அதன்படி அவர் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள 800m இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், தற்போது தகுதி பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு மத்தியில் மிகச் சிறந்த நேர அடிப்படையை கொண்டுள்ளார்.

இலங்கையின் நட்சத்திர வீரர்களான இந்துனில் மற்றும் கயந்திகா தத்தமது போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிக்காட்டி அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை அணிக்கு பதக்கங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இலங்கை தடகள விளையாட்டுச் சங்கத்தின் தலைவரான ஜெனரல். பாலித பெர்னாண்டோ குறித்த இரண்டு வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், அவர்கள் இலங்கைக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எமது வீரர்கள் உள்ளக விளையாட்டுத் திடலில் ஓடி பரிச்சயம் இல்லாத போதிலும் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். ஏனைய ஓடுதளத்தை போலல்லாது உள்ளக ஓடுதளமானது 200m நீளமானதாகவும், சற்று சாய்வானதாகவும் காணப்படும். இந்துனில் கடந்த முறை உள்ளக விளையாட்டுப் போட்டித் தொடரில் கலந்து கொண்டதுடன், கயந்திகா இம்முறையே முதல் தடவையாக இத்தொடரில் பங்குபற்றுகிறார்.

 

சூரியவெவவை சேர்ந்த கயந்திகா மற்றும் வலலயை சேர்ந்த இந்துனில் தங்களது சொந்தப் பிரதேசங்களில் 200m ஓடுதளங்களில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் என நினைக்கின்றேன். எவ்வாறாயினும் அவர்கள் இலங்கைக்கு பதக்கம் ஒன்றினை பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.”

என ஜெனரல். பாலித பெர்னாண்டோ குறிப்பிட்டார்.