சர்வதேச அரங்கிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் அலெஸ்டயர் குக்

296

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களால் வெற்றி பெற்று 4 – 1 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

மூன்று டி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் என நீண்டதொரு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இதில் டி-20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொயின் அலியின் சுழலில் சிக்கி டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா

இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

அந்த வகையில், இரு அணிகளுக்குமிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுக வீரராக இணைக்கப்படிருந்தது விஷேட அம்சமாகும்.  அது தவிர மற்றுமொரு விஷேட அம்சமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெஸ்டயர் குக் தனது இறுதி சர்வதேச போட்டியில் விளையாடி இருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்த அவ்வணி முதலாவது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்கள் மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்கள் என அடுத்தடுத்து அரைச்சதம் கடந்து இணைப்பாட்டங்கள் பெற்றுக் கொண்ட போதும் மத்திய வரிசை வீரர்களின் ஆட்டம் மிக மோசமாகவே இருந்தது எனலாம்.

அதாவது அணித்தலைவர் ஜோ ரூட் மற்றும் ஜோனி பைர்ஸ்டோவ் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமலும் பென் ஸ்டோக்ஸ் 11 ஓட்டங்கள் என ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 214 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டுவர்ட் புரோட் ஆகியோரின் இணைப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு கை கொடுத்தது. இவர்கள் இருவரும் இணைந்து 9 ஆவது விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

“உலகின் மிக மோசமான DRS கணிப்பாளர் கோஹ்லி” : மைக்கல் வோர்கன்

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் முடிவு மீளாய்வு முறைமையை…

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜோஸ் பட்லர் 89 ஓட்டங்களையும் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய அலெஸ்டயர் குக் 71 ஓட்டங்கள் மற்றும் மொயின் அலி 50 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் நீண்ட இடைவெளியின் பின் இந்திய அணியில் இணைந்த சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதமும் வீழ்ததியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை விட 40 ஓட்டங்களால் பின்தங்கி இருந்தது. இந்திய அணி சார்பாக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹனுமா விஹாரி அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு ஓட்டத்தால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை இழந்தார். கடைசிவரை சிறப்பாக விளையாடிய ரவீந்தர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பந்து வீச்சில் மொயின் அலி, அன்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

40 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை 463 ஓட்ட முன்னிலையுடன் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக தனது இறுதி போட்டியின் இறுதி இன்னிங்ஸில் விளையாடிய குக் 147 ஓட்டங்களை பெற்று சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றார். மேலும், அணித்தலைவர் ஜோ ரூட் 125 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 259 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். பந்து வீச்சில் விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்ததோடு மொஹமட் சமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் அலஸ்டைர் குக்

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக…

அதனைத் தொடர்ந்து, 464 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. அதாவது இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் வெறும் இரண்டு ஓட்டங்கள் பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டன. தவான் ஒரு ஓட்டத்துடனும் புஜாரா மற்றும் கோஹ்லி ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் லோகேஷ் ராகுல் மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் மூலம் நான்காம் நாள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்கள் பெற்றிருந்தது இந்திய அணி.

வெற்றி பெற  மேலும் 406 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் நான்காவது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது  அஜின்கியா ரஹானே 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய விஹாரி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இந்திய அணி 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 6 ஆவது விக்கெட்டுக்காக லோகேஷ் ராகுல் மற்றும் ரிஷாஃப் பாண்ட்  ஆகியோர் போட்டியின் தன்மையை மாற்றியமைத்தனர்.

இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என என்னும் அளவிற்கு இருவருனதும் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்த இத்தொடரில் இந்திய அணியின் சிறந்த இணைப்பாட்டத்தை ஆதில் ராஷித் முறியடித்தார். இருவரும் இணைந்து 204 ஓட்டங்கள் பெற்று மொத்த ஓட்ட எண்ணிக்கை 325 ஆக இருந்த போது லோகேஷ் ராகுல் 149 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஐந்து அறிமுக வீரர்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில்…

தொடர்ந்து தனது கன்னி டெஸ்ட் சதம் பெற்ற ரிஷாஃப் பாண்ட் 114 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓட்டங்களுக்கு கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ஓட்டங்களுக்கு சுருண்டு 118 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  பந்து வீச்சில் அன்டர்சன் மூன்று விக்கெட்டுகளையும், சாம் கரன் மற்றும் ஆதில் ராஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் ஜேம்ஸ் அன்டர்சன் இந்திய அணியின் கடைசி விக்கெட்டான மொஹமட் சமியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய  வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிலென் மெக்ராத்தை பின்தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக வரலாற்றில் இடம் பிடித்தார்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தனது இறுதி சர்வதேச போட்டியில் விளையாடிய அலெஸ்டயர் குக் தெரிவானதோடு தொடர் நாயகர்களாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் இங்கிலாந்து அணியின் இளம் சகலதுறை வீரர் சாம் கரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 332 – பட்லர் 89, குக் 71, , ஜடேஜா 79/4, ஷர்மா 62/3, பும்ரா 83/3,

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 292 – ஜடேஜா 86*, விஹாரி 56, அலி 50/2, அன்டர்சன் 54/2, ஸ்டோக்ஸ் 56/2

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 423/8dகுக் 147, ரூட் 125, விஹாரி 37/3, ஜடேஜா 179/3, சமி 110/2

இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 345 – ராகுல் 149, பான்ட் 114, அன்டர்சன் 45/3, கரன் 23/2, ராஷித் 63/2

போட்டி முடிவு : இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களால் வெற்றி.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<