அசலன்கவின் போராட்டம் வீண்: முதல் T20i இந்தியா வசம்

171

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20i தொடரின் முதல் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை அடுத்து, இரண்டு அணிகளும் பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரின் முதல் போட்டி, ஞாயிற்றுக்கிழமை (25) கொழும்பு R.பிரேமதாச அரங்கில் ஆரம்பானது.

பானுக்க ராஜபக்ஷ முதல் T20 போட்டியில் ஆடுவது சந்தேகம்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி T20 போட்டிகளில் முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பினை சரித் அசலன்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோருக்கு வழங்க, இந்திய அணியும் பிரித்வி சோவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு T20 போட்டிகளில் அறிமுகம் வழங்கியது. 

இலங்கை – அவிஷ்க பெர்ணான்டோ, மினோத் பானுக்க, அஷேன் பண்டார, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக கருணாரட்ன, அகில தனன்ஞய, துஷ்மன்த சமீர, இசுரு உதான

இந்தியா – ஷிக்கர் தவான் (தலைவர்), பிரித்வி சோவ், சன்ஜு சம்சன், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி, புவ்னேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்தவகையில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பிரித்வி சோவ், துஷ்மந்த சமீர வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஓட்டங்கள் எதனையும் பெறாமல் மைதானத்தினை விட்டு நடந்தார்.

Video – கடைசியில் வெற்றி பெற்ற Sri Lanka Cricket அணி | Cricket Galatta Epi 58

எனினும், இந்திய அணித்தலைவர் ஷிக்கர் தவான் மற்றும் முன்வரிசை துடுப்பாட்டவீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தோடு இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது அரைச்சதம் பெற்ற சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற, ஷிக்கர் தவான் 36 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த அவிஷ்க பெர்ணான்டோ சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், அவரின் விக்கெட் அவர் 26 ஓட்டங்களை பெற்ற நிலையில் பறிபோனது. 

இதனையடுத்து இலங்கை அணியின் ஏனைய முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காது போயினும், மத்திய வரிசையில் ஆடிய அறிமுக வீரர் சரித் அசலன்க போராட்டத்தினை வெளிக்காட்டினார். 

எனினும், தொடர்ச்சியாக தடுமாறிய இலங்கை கிரிக்கெட் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய சரித் அசலன்க 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 26 பந்துகளுக்கு 44 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். 

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் புவ்னேஸ்வர் குமார் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுக்களை சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான புவ்னேஸ்வர் குமார் தெரிவாகினார். 

இனி இரண்டு அணிகளும், மோதும் T20 தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) இதே மைதானத்தில் நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 164/5 (20) சூர்யகுமார் யாதவ் 50(34), ஷிக்கர் தவான் 46(36), துஷ்மன்த சமீர 24/2(4), வனிந்து ஹஸரங்க 28/2(4), சாமிக்க கருணாரட்ன 34/1(4)

இலங்கை – 126/10 (18.3) சரித் அசலன்க 44(26), அவிஷ்க பெர்னான்டோ 26(23), புவ்னேஸ்வர் குமார் 22/4 (3.3), தீபக் சாஹர் 24/2(3)

முடிவு – இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<