தனது கால்பந்தாட்ட வாழ்க்கையை 2005ஆம் ஆண்டு ஆரம்பித்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்த மெஸ்ஸி நேற்றுடன் சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால், முக்கியமான கிண்ணத்தை ஏதும் வெல்ல முடியாத கவலையோடு விடைபெற்றுள்ளமை பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2004ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் முதன் முறையாக டிவிஷன் போட்டியில் இஸ்பான்யாலுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக அறிமுகமானார். அன்று முதல் பார்சிலோனாவின் வளர்ப்புப் பிள்ளையாகவே மெஸ்ஸி பார்க்கப்படுகிறார்.

2005-ல் முதன்முறையாக ஆர்ஜென்டினா அணிக்காக இளையோர் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினார். இதன் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா 2-1 என நைஜீரியாவை வீழ்த்தியது. தொடரில் சிறந்த வீரர் விருதையும் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் நிகழ்த்தினார்.

ஆர்ஜென்டினா அணிக்காக முதன்முதலில் 2005ஆம் ஆண்டு ஹங்கேரி அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கினார். இடைவேளைக்குப் பிறகு 18 நிமிடங்கள் கழித்து இறங்கிய மெஸ்ஸி 47 வினாடிகள் ஆடிய பிறகு வெளியே அனுப்பப்பட்டார்.

2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினார். இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் ஜெர்மனி பெனால்டி ஷூட்டில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தியது.

2008ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆர்ஜென்டினா தங்கப்பதக்கம் வென்றது. அந்த அணியில் மெஸ்ஸி இடம்பிடித்திருந்தார்.

2008-09 ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார். 5 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார். 3 சாம்பியன்ஸ் லீக் இறுதிகளில் 2-ல் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்ததையடுத்து, ‘அனைத்துக்கால சிறந்த வீரர்’ என்ற பெயரை மெஸ்ஸி பெற்றார்.

2010ஆம் ஆண்டு பயிற்சியாளர் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை  சந்தித்தது. இதன் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0-4 என தோல்வியடைந்தது. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

மார்ச் 2012-ல் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரரானார் மெஸ்ஸி. சீசர் ரோட்ரிக்ஸ் சாதனையான 231 கோல்களைக் கடந்து மெஸ்சி 232 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தினார்.

ஆர்ஜென்டினா அணிக்காக 55 கோல்களை 113 போட்டிகளில் அடித்து அதிக கோல்களுக்கான சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். லா லிகாவில் ஒரே சீசனில் 50 கோல்கள் அடித்த சாதனையையும், ஒரு ஆண்டில் 91 கோல்கள் அடித்த சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார் மெஸ்ஸி.

தற்போது 2014 உலகக்கிண்ணம், 2015 கோபா அமெரிக்கா, 2016 கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப்போட்டிக்கு அணியை எடுத்துச் சென்று கிண்ணத்தை வெல்ல முடியாமல் போனதால் ஓய்வுபெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்