இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட்?

606
BCCI plans to host day-night Test in Bengaluru against Sri Lanka

சுற்றுலா இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியை பகலிரவுப் போட்டியாக பெங்களுரில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் பெப்ரவரி 25 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 5 ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து மார்ச் 13, 15, 18 ஆகிய திகதிகளில் மூன்று T20i போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் டெஸ்ட் போட்டிகள் பெங்களுர், மொஹாலியிலும் T20i போட்டிகள் மொஹாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் போட்டி அட்டவணை வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு உயிர்க்குமிழி பாதுகாப்பு வலையத்தில் ஏற்படுகின்ற அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக போட்டிகள் நடைபெறுகின்ற மைதானத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தர்மசாலா மற்றும் மொஹாலியில் மட்டும் T20i போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் லக்னோவில் T20i போட்டி நடத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்திய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20i தொடரையும், இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i தொடரையும் முடித்துக் கொண்ட பிறகு நேரடியாக இந்தத் தொடரில் இணையவுள்ளதால் ஒரு உயிர்க்குமிழி பாதுகாப்பு வலையத்தில் இருந்து மற்றுமொரு உயிர்க்குமிழி பாதுகாப்பு வலையத்திற்கு வீரர்களை கொண்டு வருவது பாதுகாப்பானது என்பதை அடிப்படையாக வைத்து முதலில் T20i போட்டிகளை நடத்துவது தொடர்பில் இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

மேலும், இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டியை பகலிரவுப் போட்டியாக பெங்களுரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

அதுமாத்திரமின்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோஹ்லியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக இதுவென்பதால், குறித்த போட்டியை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சொந்த மைதானமான பெங்களுரில் நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இதற்கு முன்பு இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 2019 நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாலது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷையும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அஹமதாபாத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளாக நடைபெற்றுள்ளன.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<