இலங்கை அணிக்காக விளையாட கிடைத்தமை அதிஷ்டம்: லசித் எம்புல்தெனிய

1098

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 22 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான லசித் எம்புல்தெனிய இன்று முழு கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே, பந்துவீச்சில் மிரட்டிய எம்புல்தெனிய, முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

அகில தனன்ஜயவின் தடையை நீக்கியது ஐசிசி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வரும் அகில தனன்ஜய மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து

தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்த அவர், இலங்கை அணிக்காக கன்னி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது வீரராகவும் இடம்பிடித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் அதிசிறந்த திறமையினை வெளிப்படுத்தி வருகின்ற இளம் சுழல் வீரரான எம்புல்தெனிய, இதுவரை 22 முதல்தர போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவரது சிறந்த பந்துவீச்சு 59 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகும். அதேபோல, போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு பெறுமதியாக 123 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகும்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்காகவும் லசித் விளையாடியிருந்தார்.

இதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் ஹேலீஸ் அணிக்காக விளையாடிய லசித் எம்புல்தெனிய, மாகாண அணிகளுடனான டி-20 போட்டியில் கொழும்பு அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் இருந்து கிரிக்கெட்டுக்கு காலடி எடுத்து வைத்து கொழும்பு என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளரான எம்புல்தெனிய, இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான உத்தியோகபற்றற்ற டெஸ்ட் தொடரிலும் விளையாடியிருந்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி

இதனையடுத்து நடைபெற்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் தொடரிலும் பிரகாசித்திருந்த எம்புல்தெனியவுக்கு, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது.

மிகவும் குறுகிய காலத்தில் தனது அபார திறமைகளின் மூலம் தேசிய அணியில் விளையாடுவதற்கு வரம் பெற்று, தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக வினையாடினார்.

இறுதியில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்குதாரராக இருந்த லசித் எம்புல்தெனியவுடன் அண்மையில் மேற்கொண்ட நேர்காணலை இங்கு பார்க்கலாம்.

  • உங்களுடைய பாடசாலை கிரிக்கெட் பற்றிச் சொல்லுங்கள்?

நான் கொழும்பு றோயல் கல்லூரியில் இருந்து தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு காலடி எடுத்துவைத்தேன். 2007இல் முதற்தடவையாக 13 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியிருந்தேன். அதன்பிறகு தொடர்ந்து பாடசாலை அணிக்காக அனைத்து வயதுப் பிரிவுகளிலும் விளையாடி 2016இல் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

  • பாடசாலை கிரிக்கெட்டில் உங்களது சாதனைகள் உண்டா?

ஆம். 2016இல் நடைபெற்ற பாடசாலை மட்ட போட்டிகளில் 18 போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தேன். இது பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் றோயல் கல்லூரி சார்பாக வீரரொருவர் பெற்றுக் கொண்ட அதிக விக்கெட்டுகளாகப் பதிவாகியது. எனினும், இது பாடசாலை சாதனையா என்பது எனக்குத் தெரியாது.

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்த லசித் எம்புல்தெனிய

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில்

  • இலங்கை இளையோர் அணிக்காக விளையாடவில்லையா?

ஒருசில தடவைகள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட குழாத்தில் இடம்பிடித்திருந்தேன். ஆனால் இறுதி பதினொருவர் அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே வளர்ந்துவரும் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக விளையாடியிருந்தேன். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தேன். அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இலங்கை பதினொருவர் அணிக்காக பயிற்சிப் போட்டியில் விளையாடினேன்.

  • முதல்தரப் போட்டிகளில் எப்போது விளையாட ஆரம்பித்தீர்கள்?

பாடசாலையிலிருந்து வெளியேறியவுடன் நான் என்.சி.சி கழகத்துடன் இணைந்து கொண்டேன். எனினும் குறித்த வருடம் எனக்கு ஏற்பட்ட உபாதையினால் அந்த கழகத்துக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 2017/18 பருவகாலத்துக்காக நடைபெற்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான 3 நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடி 63 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தேன். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய முதல்தர கழகங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் போட்டிகளில் மீண்டும் விளையாடி 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன்.

  • கடந்த வருடம் நடைபெற்ற மாகாண அணிகளுடனான போட்டிகளில் விளையாடி இருந்தீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

இருபதுக்கு-20 போட்டிகளில் கொழும்பு அணிக்காக விளையாடியிருந்தேன். ஆனால் ஒரு போட்டியிலாவது களமிறங்கவில்லை. எனினும், மாகாண அணிகளுடனான நான்கு நாள் கொண்ட ஒரு போட்டியிலும், ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் விளையாடினேன். இந்தப் போட்டித் தொடரில் எதிர்பார்த்தளவு திறமைகளை என்னால் வெளிப்படுத்த முடியாவிட்டாலும், தேசிய அணியில் உள்ள வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது. இது எனக்கு மிகப் பெரிய அனுபவத்தையும் கொடுத்திருந்தது.

  • கிரிக்கெட் வீரராகுவதற்கு முடிந்தமையிட்டு என்ன நினைக்கிறீர்கள்?

சிறுவயது முதல் கிரிக்கெட்டை ஆர்வத்துடன் விளையாடினேன். பாடசாலையிலும் இந்த விளையாட்டில் மாத்திரம்தான் அதிக கவனம் செலுத்தியிருந்தேன். ஒரு கிரிக்கெட் வீரராக பாடசாலை அணிக்கு ஆற்றிய சேவையைப் போல தற்போது இலங்கை முன்னணி கழகங்களில் ஒன்றான என்.சி.சி அணிக்காக விளையாட கிடைத்தமை மிகப் பெரிய மகிழ்ச்சி.

அந்த அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களும் எனக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்தார்கள். இதன்காரணமாக எனக்கு உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி மிகவும் குறுகிய காலத்தில் தேசிய அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பும் கிடைத்தது.

டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி இலங்கை அணியை வெற்றிக்கு இட்டுச்

  • எந்த வகையான போட்டிகளில் விளையாடுவதற்கு விரும்புகிறீர்கள்?

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிக விருப்பம். நான் ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர். எனவே, அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். எனினும், டெஸ்ட் போட்டிகளில் தான் எல்லா வீரர்களுக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • கிரிக்கெட் விளையாட்டு கல்விக்கு தடையாக இருக்கவில்லையா?

இல்லை. கிரிக்கெட் விளையாடுவதற்கு எனது அம்மாதான் முழுக்க முழுக்க காரணம். அவரது முயற்சியினால்தான் நான் இந்தளவு தூரத்துக்கு வந்துள்ளேன். என்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என அவர்தான் அதிகம் ஆசைப்பட்டார். அதேபோல நான் கல்வியையும் சரிசமமாக முன்னெடுத்தேன். தற்போது நான் பொறியியல் மற்றும் வியாபார முகாமைத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முன்னெடுத்து வருகின்றேன். எனினும், தற்போது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்ற காரணத்தால் குறித்த படிப்புகளை தொடர முடியாமல் உள்ளது.  

  • தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

முதல் டெஸ்ட் போட்டியிலேயே அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்ய கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்திலும் இவ்வாறு அணிக்காக சிறந்த முறையில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். முதல் போட்டியில் விளையாடியது பயத்தை கொடுத்திருந்தாலும், நாட்டில் விளையாடியது போல சாதாரணமாக பந்துவீசினேன். அதேபோல, துடுப்பாடிய போதும் என்ன நடந்தாலும் ஆட்டமிழக்காமல் விளையாட வேண்டும் என மனதில் உறுதி கொண்டேன்.   

  • எதிர்கால இலக்கு என்ன?

எல்லோரையும் போல தேசிய அணிக்காக விளையாடுவதுதான் எனது விருப்பம். அந்த வாய்ப்பு தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம் கிடைத்துவிட்டது. உண்மையில் மிகவும் குறுகிய காலத்தில் இந்த வெற்றியைப் பெறமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனவே தொடர்ந்து தேசிய அணிக்காக திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க