சேஷார்ட்டின் உலகக் கிண்ண கனவை சிதைத்ததா ஆப்கானிஸ்தான்?

948
Mohammad Shahzad

தனது உடற்தகுதி சிறப்பாக இருக்கும் பட்சத்திலும், நிர்வாகம் தன்னை உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான மொஹமட் சேஷார்ட் கவலை தெரிவித்துள்ளார். எனினும், அவர் உடற்தகுதி பெறாத காரணத்தினாலேயே மாற்று வீரராக இக்ரம் அலிகில்லை அணியில் இணைத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் மொஹமட் சேஷார்ட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத்…

மொஹமட் சேஷார்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியின் போது, முழங்கால் உபாதை காரணமாக பாதியில் மைதானத்திலிருந்து வெளியேறினார். எனினும், அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் சேஷார்ட் விளையாடினார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓட்டங்கள் இன்றியும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓட்டங்களுடனும் அவர் ஆட்டமிழந்திருந்தார்.

இந்தநிலையில், மொஹமட் சேஷார்ட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில், அவரின் இடது முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, உலகக் கிண்ண குழாத்திலிருந்து அவர் நீக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. எனினும், தான் உடற்தகுதியுடன் இருப்பதாக குறிப்பிட்ட சேஷார்ட், தவறான முறையில் தன்னை அணியிலிருந்து நீக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மொஹமட் சேஷார்ட்,

“நான் அணி வீரர்களுடன் பயிற்சிகளை மேற்கொண்டேன். அதில், விக்கெட் காப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டேன். பின்னர், வீரர்களுடன் உணவு அருந்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு சென்றதும், ஐசிசியிடமிருந்து வந்த ஊடக அறிவிப்பிலேயே நான் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன் என்பதை அறிந்தேன். அத்துடன், அப்போதுதான் எனக்கு உடற்தகுதி இல்லாததையும் நான் தெரிந்துக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து அணி முகாமையாளருடன் கலந்துரையாடினேன். குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வைத்தியரிடம் கலந்துரையாடுமாறு கூறினார். வைத்தியர் எனக்கு சார்பாக இருக்கவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பில் எனக்கு தெரியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுமாயின் அவர்கள் என்னிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு நான் தேவையில்லை என்றால், நான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவேன்”

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், இதற்கு பின்னர் கிரிக்கெட் விளையாடுவற்கு எனக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. உலகக் கிண்ணத்தில் விளையாடுவது எனது கனவு. 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலும் நான் (உடற்தகுதியின்மையால்) நீக்கப்பட்டேன். இப்போதும் அதே விடயம் நடந்திருக்கிறது. எனது மனம் இப்போது கிரிக்கெட்டுடன் இல்லை. நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஆலோசனை செய்து ஒரு முடிவினை எடுக்கவுள்ளேன்” என்றார்.

Photos: Sri Lanka vs Afghanistan | ICC Cricket World Cup 2019 – Match 07

ThePapare.com | 04/06/2019 | Editing and re-using images without…

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகம் உடற்தகுதி சிக்கலுக்கு முகங்கொடுத்துவரும் மொஹமட் சேஷார்ட், ஆப்கானிஸ்தான் அணிக்கான கன்னி டெஸ்ட் போட்டியில் இணைக்கப்படவில்லை. அத்துடன், 2017ம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது உலகக் கிண்ண குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும், சேஷார்ட்டின் வெளியேற்றம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, சேஷார்ட் சிறந்த துடுப்பாட்ட வீரர் எனவும், அவரது உடற்தகுதி காரணமாகவே அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வைத்திய பரிசோதனை அறிக்கையை ஐசிசியிடம் கையளித்த பின்னரே அணியில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மொஹமட் சேஷார்ட் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிக ஒருநாள் ஓட்டங்களை (2,727) பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<