டெஸ்ட் போட்டிகள் மாறினால் அதை ”இலகு கிரிக்கெட்” என அழைக்கலாம் – பென் ஸ்டோக்ஸ்

147

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றம் பெறுவது தொடர்பில் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, பென் ஸ்டோக்ஸ் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றம் வந்தால் அதனை ”இலகு கிரிக்கெட்” (Easy Cricket) என அழைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.  

ஒன்பது விரல்களுடன் இந்தியாவுக்கு விளையாடிய பார்த்திவ் பட்டேல்

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக ……..

கடந்த 2019ஆம் ஆண்டு ஹெடிங்லி நகரில் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டி மூலம், வரலாறு கண்ட மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றை பென் ஸ்டோக்ஸ் தனது துடுப்பாட்டம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். ஸ்டோக்ஸின் குறித்த இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டிகள் எந்தளவிற்கு சுவராசியத் தன்மை கொண்டவை என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.   

இவ்வாறாக சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத டெஸ்ட் போட்டிகளில் மாற்றங்கள் கொண்டுவரக்கூடாது என்ற நோக்கிலேயே பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து அமைந்திருக்கின்றது.  

”என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகள் பிரமாண்டமானவை. ஆனால், டெஸ்ட் போட்டிகள் மடிந்து போவதாக தற்போது கருத்துக்கள் வெளியாகுகின்றன. ஆனால், உண்மையிலேயே இவ்வாறான கருத்துகள் எங்கிருந்து வருகின்றது என்று தெரியவில்லை. 

(டெஸ்ட் போட்டிகள் பற்றி) நீங்கள் அனைவரிடமும் கேளுங்கள், அல்லது ஓரிரு நபர்களிடம் கேளுங்கள். நான் அறிந்து வைத்திருக்கும் வரை விராட் கோலி, ஜோ ரூட் போன்ற முன்னணி வீரர்கள் இவ்வகைப் போட்டியில் நீங்கள் எப்படியான சோதனைக்கு முகம்கொடுப்பீர்கள் என்பது பற்றி கதைத்திருக்கின்றனர்.  

கிரிக்கெட் வீரராக பார்க்கும் போது கிரிக்கெட்டின் தூய வடிவமாக டெஸ்ட் போட்டிகளே உங்களுக்கு இருக்கும். இப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் வந்தால் அந்த நாள் உங்களுக்கு சோகமானதாக மாறும். எனவே, டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் கொண்டு வந்தால் அதில் மாற்றம் கொண்டுவருபவர்கள் அதை இலகு கிரிக்கெட் என அழைக்க வேண்டும்.”

கடந்த ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்காக வழங்கப்பட்ட விஸ்டன் விருதினையும் வென்றிருக்கும் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கும் முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார். ஏனெனில், 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் பெற்ற 82 ஓட்டங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமாக அமைந்திருந்தது.   

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கிரிக்கெட் உலகக் கிண்ணம் வென்றது பற்றியும் கருத்து வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ், மோசமான 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டிகளில் நல்ல மாற்றம் ஒன்றை காட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<