இலங்கை “ஏ” அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன

11321
Dimuth Karunarathne

மேற்கிந்திய தீவுகள் “ஏ” கிரிக்கெட் அணி இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை “ஏ” அணியோடு 3 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் 3 அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான இலங்கை “ஏ” அணியின் தலைவராக 28 வயது நிரம்பிய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் முதல் 2 நான்கு நாட்களை கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு இலங்கை “ஏ” அணியை வழிநடத்துவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த தொடருக்கான இலங்கை “ஏ” அணியின் உபதலைவராக அதிரடி இடதுகை துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த  இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் பின் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் நீக்கப்பட்டு இருந்த லஹிரு திரிமான்ன 15 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். அத்தோடு இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோரும் இந்த 15 பேர் கொண்ட குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களோடு அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளனார் லக்ஷன் சந்தகன் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரியவும் இந்த குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து மண்ணில் இலங்கை “ஏ” அணியை வழிநடாத்திய அஷான் பிரியன்ஜன் இந்த தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற  இந்திய அணியுடனான டி20 போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கட் உலகில் அறிமுகமான அசேல குணரத்ன மீண்டும் இந்த தொடருக்கான இலங்கை “ஏ” அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை “ஏ” குழாம்

திமுத்  கருணாரத்ன (தலைவர்), குசல் ஜனித் பெரேரா (உப தலைவர்), லஹிரு திரிமன்ன, ரொசான் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, அனுக்  பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, லக்ஷன் சந்தகன், விமுக்தி பெரேரா, கசுன் மதுசங்க

போட்டித்தொடரின் காலநேர அட்டவணை

1ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் : ஒக்டோபர் 4 – 7 (ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

2ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் : ஒக்டோபர் 11 – 14 (பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

3ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் : ஒக்டோபர் 18 – 21 (ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

1ஆவது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டி : ஒக்டோபர் 24 (ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

2ஆவது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டி : ஒக்டோபர் 27 (குருநாகல் வெலகெதர கிரிக்கெட் மைதானம்)

3ஆவது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டி : ஒக்டோபர் 30 (ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்)