ஐசிசியின் சிறந்த மகளிர் T20I அணியில் இடம்பெற்ற இனோகா ரணவீர

ICC Women's T20I Team of the Year 2022

48

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் T20I பதினொருவரில் இலங்கை வீராங்கனை இனோகா ரணவீர இடம்பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளை தெரிவுசெய்து சிறந்த பதினொருவர் அணியினை ஐசிசி வெளியிட்டு வருகின்றது.

>> சுபர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை U19 அணி!

அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய வீராங்கனைகளைக் கொண்டு சிறந்த மகளிர் T20I அணியினை ஐசிசி அறிவித்துள்ளது.

குறித்த இந்த அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி சுழல் பந்துவீச்சு வீராங்கனை இனோகா ரணவீர இடம்பெற்றுள்ளார். இனோகா ரணவீர கடந்த ஆண்டு 19 T20I போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 4 போட்டிகளில் 3 இற்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், 05.75 என்ற ஓட்ட கட்டுப்பாடுடன் பிரதிகளை நிறைவுசெய்துள்ளார்.

இனோகா ரணவீர கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ஆசியக்கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இனோகா ரணவீரவுடன், இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா, தீப்தி ஷர்மா,  ரிச்சா கோஸ் மற்றும் ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான மகளிர் T20I அணி

ஸ்ம்ரிதி மந்தனா, பெத் மூனி, ஷோப்பி டிவைன் (தலைவி), அஷ் கார்ட்னர், தைலா மெக்ராத், நிடா தார், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஷோப்பி எஸ்கலெஸ்டோன், இனோகா ரணவீர, ரேணுகா சிங்க

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<