பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி த்ரில்லர் வெற்றி

275

மகளிர் T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இன்று (06) அயர்லாந்து வீராங்கனைகளை எதிர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 02 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை அதிரடியால் மீட்ட தசுன் ஷானக

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்க தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அதற்கு முன்னதாக இரண்டுப் பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகின்றது.

அதன்படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் முதலாவது பயிற்சிப் போட்டி அயர்லாந்து வீராங்கனைகளுடன் இன்று (06) ஸ்டெல்லன்போஸ்ச் நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து மகளிர் அணித்தலைவி லோரா டெலானி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீராங்கனைகளுக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது. இலங்கையின் துடுப்பாட்டத்தில் ஹர்சித சமரவிக்ரம 46 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் விஷ்மி குணரட்ன 34 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அயர்லாந்து பந்துவீச்சில் அதன் தலைவி லோரா டெலானி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க கெரா மூராய் மற்றும் எய்மர் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 150 ஓட்டங்களை அடைய பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து மகளிர் அணி இறுதிவரை வெற்றி இலக்கிற்காக போராடியதோடு 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 147 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா?

அயர்லாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் கேபி லூயிஸ் 24 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுக்க, இறுதிவரை போராடிய ஏர்லின் கெல்லி 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 17 பந்துகளில் 30 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சில் ஓஷதி ரணசிங்க மற்றும் இனோக்கா ரணவீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியோடு மகளிர் T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றிருக்கும் இலங்கை மகளிர் அணி அடுத்ததாக விளையாடும் பயிற்சிப் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (08) மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<