மொயின் அலிக்கு ICC அபராதம்

The Ashes 2023

137
Moeen fined for spraying drying

தனது கையை உலர்த்துவற்கு நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை கையில் தெளித்த இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு அபராதம் விதிக்க ICC நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி போட்டியின் 89ஆவது ஓவரின் போது எல்லைக் கோட்டுக்கு அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த போது தனது வலது கையில் நடுவர்களின் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை Spray செய்து கொண்டு அடுத்த ஓவரை வீச வந்துள்ளார். இது மைதானத்தில் இருந்த கெமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்ததுடன், கள நடுவரின் குற்றச்சாட்டை அடுத்து மொயின் அலி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

எவ்வாறாயினும், மொயின் அலி பயன்படுத்திய அந்த Spray பந்தின் தரத்தையோ பந்தின் செயல்பாட்டையும் மாற்றவில்லை என்றாலும் நடுவரின் அனுமதி இன்றி அதைப் பயன்படுத்தியதால் அவருக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

>> ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற மொயின் அலி ஆஷஸ் தொடரில்

இதுதொடர்பில் ICC தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் மொயின் அலி ICC இன் சட்டவிதி 2.20-ஐ மீறியுள்ளார். இந்த விதி வீரர் ஒருவர் ஆட்டத்தின் மாண்பினை வழுவாது சரிவர கடைபிடித்து விளையாட வேண்டும் எனக் கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் ICC கிரிக்கெட் விதிமீறலுக்காக மொயின் அலிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மொயின் அலிக்கு குறை மதிப்பு புள்ளி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொயின் அலி மூன்று குறை மதிப்பு புள்ளிகளைப் பெற்றால் அவருக்கு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.

இதனிடையே, மொயின் அலி விதி மீறலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதால் அவரிடம் விசாரணை எதுவும் இருக்காது என ICC தெரிவித்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<