பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு ஐ.சி.சி எச்சரிக்கை

239
Image Courtesy - Getty Image

பாகிஸ்தான் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் நடுவரின் தீர்ப்புக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் செயற்பட்டதனால் ஐ.சி.சி யானது அவர் மீது எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியையும் வழங்கியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் ஆடிவருகின்றது.

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது தென்னாபிரிக்கா

சுற்றுத்தொடரின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. கடந்த புதன்கிழமை (26) பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றி பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையையும் முதல் டெஸ்ட்டில் தனதாக்கிக் கொண்டார்.

5 நாட்களை கொண்ட குறித்த டெஸ்ட் போட்டியானது வெறும் இரண்டரை நாட்களுக்குள் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அணித்தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்டிபாடுகளை உள்ளடக்கும் விதிமுறையின் 2.8 அத்தியாயத்தை மீறியுள்ளதாக ஐ.சி.சி அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த அத்தியாயமானது போட்டி நடுவர்களின் முடிவுகளுக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இடையூறு விளைவித்தல் தொடர்பாக சுட்டிக்காட்டுகின்றது.

149 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் 9 ஆவது ஓவரின் போது களத்தில் துடுப்பெடுத்தாடிய டீன் எல்காருக்கு ஆதரவாக மூன்றாம் நடுவரான ஜொய்ல் வில்சன் செயற்படுவதாக தெரிவித்து, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மூன்றாம் நடுவரான (தொலைக்காட்சி நடுவர்) ஜொய்ல் வில்சனின் அறைக்கு சென்று மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு குறித்து நடுவரிடம் கேள்வி எழுப்பி பின்னர் நடுவரின் அறையிலிருந்து கோபத்துடன் வெளியேறியிருந்தார்.

போட்டி முடிவுற்றதன் பின்னர் மூன்றாம் நடுவரான ஜோய்ல் வில்சன் மூலமாக போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூனினால் மிக்கி ஆர்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் காரணமாக மிக்கி ஆர்தருக்கு ஐ.சி.சி இனால் உத்தியோகபூர்வ எச்சரிக்கை மற்றும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்தினை மிக்கி ஆர்தர் ஒப்புக் கெண்டுள்ளதனால் எந்த விதமான மேலதிக விசாரணைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த மிக்கி ஆர்தர் 2016 மே 6 ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரினுடைய வழிகாட்டலின் கீழ் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்று டி20 சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்ற பாகிஸ்தான் அணியை இன்று வரை அதே முதலிடத்தில் நிலைத்து நிற்க வழிகாட்டுகின்றமை விசேட அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<