சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக் ஹஸிக்கு கொரோனா

Indian Premier League - 2021

124
BCCI

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதனை மைக் ஹஸியின் முகாமையாளர் நெய்ல் மெக்ஸ்வெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி மும்பையில் ஒரே ஹோட்டலில்தான் சென்னை அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கி இருந்தனர். இதில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது

இதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள், அதிகாரிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

அதேபோன்று, சென்னை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியினரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்

இந்த நிலையில், சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், ”மைக் ஹஸிக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்குத் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் இரண்டாவது தடவையாக பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக .பி.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்ளிட்ட குழாமினர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழாமினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொல்கத்தா – பெங்களூர் மோதல் வேறு திகதியில்

கடந்த திங்கட்கிழமை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் போன்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

அதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் வீரர் விருத்திமான் சாஹாவுக்கும் கொரோனா உறுதியானது. தொடர்ந்து டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ராவுக்கு தொற்று உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான .பி.எல் T20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…