டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடத்தை இழந்த கோஹ்லி

115

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோஹ்லி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 10 இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட் முதல் தடவையாக டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 2 என சமன் செய்தது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், பந்துவீச்சாளர், சகலதுறை வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ICC நேற்று (06) வெளியிட்டுள்ளது.

இதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோஹ்லி 6 ஆண்டுகளுக்கு பிறகு அதவாவது 2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் 10 இடத்தை இழந்துள்ளார். அண்மைக் காலங்களில் வெளிப்படுத்திய மோசமான துடுப்பாமட்டம் காரணமாக அவர் 13ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைச் சதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட் 5 இடங்கள் முன்னேறி முதல் தடவையாக துடுப்பாட்ட தரவரிசையில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 9ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 8 இடங்கள் முன்னேறி 34ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, நியூசிலாந்து தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் ஜொன்னி பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திலும் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் 2ஆவது இடத்திலும் மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4ஆவது இடத்திலும் தொடர்கின்றனர்.

இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தில் உள்ளார். இதில் அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 2ஆவது இடத்திலும் பும்ரா 3ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

மேலும், சலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2ஆவது இடத்தில் பங்காளதேஷ் அணியின் சகிப் அல் ஹசனும், 3ஆவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டரும் உள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<