இந்திய ஒருநாள் அணியின் தலைவராக ஷிகர் தவான்

363
Shikhar Dhawan to lead India in West Indies ODIs

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு 3 ஒருநாள், 3 T20i போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதன் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 T20i போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (06) அறிவித்துள்ளது.

இந்த தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடிய வேளையில் தற்போது மீண்டும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சிரேஷ்ட வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட அணியே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணியில் ஷிகர் தவான் தலைவராகவும் ரவீந்திர ஜடேஜா உப தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா ஆகியோருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமன்றி சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகிய இருவரும் ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மொஹமட் சிராஜ் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

மறுபுறத்தில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, ரிஷப் பாண்ட், அஷ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை டிரினிடாட், போர்ட் ஆஃப் ஸ்பெயின் மற்றும் குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (தலைவர்), ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர்,  யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ், அர்ஷ்தீப் சிங்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<