இலங்கை டெஸ்ட் அணியில் திடீரென பல மாற்றங்கள்

Australia tour of Sri Lanka 2022

1281

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இளம் வீரர் துனித் வெல்லாலகே பெயரிடப்பட்டுள்ளார்.

துனித் வெல்லாலகேவுடன், ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் மாத்திரம் விளையாடிவந்த மஹீஷ் தீக்ஷன மற்றும் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் லக்ஷித மானசிங்க ஆகியோரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

>> இலங்கை அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொவிட்-19 தொற்று

மேற்குறிப்பிட்ட மூவரும் இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பதுடன், மஹீஷ் தீக்ஷன இதற்கு முதல் 3 முதற்தர போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். லக்ஷித மானசிங்க அவுஸ்திரேலிய A அணிக்கு எதிரான 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியதுடன், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த துனித் வெல்லாலகே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்திலிருந்து சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் எம்புல்தெனிய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருக்கவில்லை.

இதன்காரணமாக லசித் எம்புல்தெனியவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு இடதுகை சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், துனித் வெல்லாலகேவுக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனவே, இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<