5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம்

216

டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கான வருடாந்த தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று (04) வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்த டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் (111 புள்ளிகள்) அவுஸ்திரேலிய அணி 9 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

எனவே, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணி இவ்வாறு டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பெட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆஷஸ் தொடரை 4 இற்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் டெஸ்ட் தரவரிசையிலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலிலும் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

இதனிடையே, ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான வருடாந்த தரவரிசையில் 3ஆவது இடத்தில் நியூசிலாந்தும், 4ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவும், 5ஆவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கடைசி 5 இடங்களில் உள்ளன.

2019 மே மாதம் முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் இந்தப் புதிய தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்து அணி 124 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி (107 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும் உள்ளன.

இதேநரம், இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் 4 முதல் 7 வரையான இடங்களைப் பெற்றுக்கொள்ள, இலங்கை அணி 6 போனஸ் புள்ளிகளைப் பெற்று 87 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, T20 அணிகளுக்கான பட்டியலில் இந்தியா 270 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை விட 5 புள்ளிகள் கூடுதலாக அந்த அணி பெற்றுள்ளது. 2ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும் காணப்படுகின்றன.

தற்போது 6ஆவது இடத்தில் உள்ள நியூசிலாந்தை தென்னாபிரிக்காவும், அவுஸ்திரேலியாவும் பின்னுக்குத் தள்ளியுள்ளன. அதேபோன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் முறையே 8ஆவது மற்றும் 9ஆவது இடங்களைப் பெற்றுக்கொள்ள, ஆப்கானிஸ்தான் அணி 10ஆவது இடத்தில் உள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<