9 வீரர்களுடன் போராடித் தோற்ற இலங்கை இளம் வீரர்கள்

Photo - AFC

துர்மனிஸ்தான் அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட AFC கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் முதல் பாதியில் முன்னிலை பெற்ற இலங்கை அணி இரண்டாவது பாதியில் கோல்களை விட்டுக்கொடுத்து 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

கட்டார் மற்றும் யெமன் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையிலேயே இலங்கை மற்றும் துர்க்மனிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகள் பரஸ்பரம் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் 2020 சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறாத நிலையில் டோஹா ஸ்போட்ஸ் சிட்டி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற போட்டி இரு அணிகளுக்கும் கௌரவத்திற்கான ஆட்டமாக மாறியது.  

இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த யெமன்

யெமன் அணிக்கு எதிராக இடம்பெற்ற 19…..

எனினும் இலங்கை வீரர்கள் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றனர். லெப்ட் விங் பகுதியில் இருந்து ஷபீர் ரசூனியா பரிமாற்றிய பந்தை கண்ணன் தனூஷன் கோலாக மாற்ற 6ஆவது நிமிடத்தில் பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியது. எனினும் அதனை துர்க்மனிஸ்தான் பின்கள வீரர்கள் தடுத்தனர்.  

தொடர்ந்து பந்தை நேர்த்தியாக பரிமாற்றிய இலங்கை கோல் கம்பத்தை ஆக்கிரமித்த துர்க்மனிஸ்தான் வீரர்கள் கோல் ஒன்றை பெற நெருங்கினர். எனினும் போர்ஜகோவ் அலியின் அந்த முயற்சி நூலிழையில் தவறியது.  

போட்டியின் ஆரம்பத்திலேயே தவறிழைத்த ஹசிக்க நவோத நடுவரிடம் மஞ்சளட்டை பெற்றார். நவோதவுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின் போது பந்து இலக்குத் தவறிப் பறந்தது.  

மொஹமட் முர்சித் துர்க்மனிஸ்தானுக்கு இலகுவான கோல் ஒன்றை விட்டுக் கொடுக்கும் நெருக்கடி ஒன்றும் ஏற்பட்டது. அவர் பெனால்டி எல்லைக்குள் பந்தை வெளியேற்ற உதைத்தபோதும் அது துர்க்மனிஸ்தான் முன்கள வீரர் மிராபடியேவ் ரஹ்மானிடம் சென்றது. எனினும் அப்போது ரஹ்மான் உதைத்த பந்து கோல் கம்பத்தைத் தாண்டி வெளியேறியது.  

பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கடத்திச் சென்ற மொஹமட் சாஜித் இலங்கை அணிக்கு உயிரோட்டமாக செயற்பட்டார். இந்நிலையில் இலங்கை பெனால்டி பெட்டிக்குள் அநாவசியமாக விழுந்த துர்க்மன் வீரர் ஹைட்ரோ ஷமமெட் மஞ்சள் அட்டை பெற்றார். அப்போது சரியான இடத்தில் இருந்த இந்திய நடுவர் உடனடியாக இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் ஒருமுறை சிறப்பாக பந்தை கையாண்ட மொஹமட் சாஜித் இடது பக்கமாக ஷபீர் ரசூனியாவிடம் பந்தை கொடுத்தார். ஷபீர் பந்தை கோலை நோக்கி கடத்திச் சென்றபோது எதிரணி பின்கள வீரர்கள் அதனை தடுத்ததால் இலங்கை அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு தவறியது

எனினும் 42 ஆவது நிமிடத்தில் இலங்கை இளம் வீரர்கள் கோல் பெற்று அணியை முன்னிலை பெறச் செய்தனர். அப்துல் பாசித் பந்தை நீண்ட தூரம் வீசியபோது அதனை பெற்ற மொஹமட் குர்சித், மேலால் உதைக்க அதனை சாஜித் உயரப் பாய்ந்து தலையால் முட்டி கோலை பெற்றார்

எனினும் இந்த கோலை பெற உதவிய மொஹமட் குர்சித் துர்க்மனிஸ்தான் மத்தியகள வீரரும் தேவையின்றி மோதலில் ஈடுபட்டதால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.   

முதல் பாதி: துர்க்மனிஸ்தான் 0-1 இலங்கை

10 வீரர்களுடன் இரண்டாவது பாதி ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 4-4-1 என்ற முறையில் களமிறங்கியது. ஆரம்பத்தில் ஷபீர் ரசூனியா மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை துர்க்மன் கோல்காப்பாளர் அஹல்யேவ் ருஸ்தும் சிறப்பாக தடுத்தார்

இலங்கையின் மத்திய களம் மற்றும் பின்களம் ஒற்றுமையுடன் நேர்த்தியாக ஆடியதால் அதனை முறியடிப்பதற்கு துர்மனிஸ்தான் வீரர்கள் போராட வேண்டி ஏற்பட்டது. இலங்கை வீரர்களின் கால்களில் பந்து கிடைக்கும்போது அதனை தற்காத்துக் கொள்வதை விடவும் தாக்குதல் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தவே முயன்றனர்.  

கட்டாருக்கு எதிராக அபார தடுப்புக்களை மேற்கொண்ட முர்ஷித்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19…..

பொர்ஜெகொவ் உதைத்த பந்தை சிறப்பாக தடுத்து மொஹமட் முர்சித் இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்தார். எனினும் இலங்கையின் பின்களம் பலவீனமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த 63 ஆவது நிமிடத்தில் சப்பனொவ் ரெசுல் துர்க்மனிஸ்தானுக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.  

இந்நிலையில் 67 ஆவது நிமிடத்தில் தவறிழைத்த ஹசிக்க நவோத் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் கிடைத்த ப்ரீ கிக்கை கொண்டு பொர்ஜகொவ் அலி துர்க்மன் அணியை போட்டியில் முன்னிலை பெறச் செய்தார்.   

இதனை அடுத்து தடுமாற்றம் கண்ட இலங்கை வீரர்கள் எதரணிக்கு வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தது. குறிப்பாக 2 மேலதிக வீரர்களைக் கொண்ட துர்க்மன் அதனை முழுமையாக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கை பின்களத்தை இலகுவாக முறியடித்த ஹைட்ரோ ஷம்மமத் துர்க்மன் அணிக்காக 3ஆவது கோலை புகுத்தினார்.

எனினும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய இலங்கை அணி கண்ணண் தனுஷன் பரிமாற்றிய பந்தைக் கொண்டு மொஹமட் சாஜித் மூலம் இரண்டாவது கோலை பெற்றது.

போட்டி முடியும் நேரத்தில் துர்க்மனிஸ்தான் அணி நான்காவது கோலையும் பெற்றது. மைரட்பெர்தியேவ் ரஹ்மான் அந்த கோலை புகுத்தினார்.  

முழு நேரம்: துர்க்மனிஸ்தான் 4 – 2 இலங்கை

கோல் பெற்றவர்கள்

இலங்கை மொஹமட் சாஜித் 42’, 80’

துர்க்மனிஸ்தான் சப்பனொவ் ரெசுல் 63’, பொர்ஜகொவ் அலி 67’, ஹைட்ரோ ஷம்மமத் 78’, மைரட்பெர்தியேவ் ரஹ்மான் 89’  

>>மேலும் பல கால்பந்து  செய்திகளைப் படிக்க<<