மே. தீவுகளுக்கு எதிராக நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றி

ICC Men's Cricket World Cup Qualifier 2023

103

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி அற்புதமான வெற்றியினை பதிவுசெய்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நெதர்லாந்து அணி பெற்ற முதல் வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

>> இளையோர் லீக் தொடரின் போட்டிகள்

ஹராரேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பிரெண்டன் கிங் (76 ஓட்டங்கள்) மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் (54 ஓட்டங்கள்) ஆகியோர் அரைச்சதங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அணித்தலைவர் ஷேய் ஹோப் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். இவர் வெறும் 65 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இவருடன் இறுதி ஓவரில் 20 ஓட்டங்களை விளாசிய கீமோ போல் 25 பந்துகளில் 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் பேஸ் டி லீட் மற்றும் சகிப் சுல்பிகார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தங்களுடைய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 315 ஓட்டங்களை மாத்திரம் அதிகமாக (பேர்முடா அணிக்கு எதிராக) பெற்றிருந்த நெதர்லாந்து அணிக்கு இந்த வெற்றியிலக்கு மிகப்பெரிய இலக்காக மாறியிருந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் வெற்றி மேற்கிந்திய தீவுகளுக்கு சாதகமாக இருந்தது. நெதர்லாந்து அணியின் முன் வரிசை வீரர்கள் ஓரளவு ஆரம்பத்தை பெற்றாலும், ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து அணிக்கு 125 பந்துகளில் 205 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

எனினும் 5வது விக்கெட்டுக்காக தேஜா நிடமனுறு மற்றும் அணித்தலைவர் ஸ்கொட் எட்வர்ட்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேஜா நிடமனுறு அபாரமாக ஆடி 76 பந்துகளில் 111 ஓட்டங்களை விளாச, மறுமுனையில் எட்வர்ட்ஸ் 47 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசினார்.

இவர்களின் 143 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் 36 பந்துகளில் 61 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்ததுடன், நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு சாதகம் ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியை தங்கள் பக்கம் திருப்பியது. இதில் கடைசி 2 ஓவர்களுக்கு 30 ஓட்டங்கள் நெதர்லாந்து அணிக்கு தேவையாக மாறியதுடன், 3 விக்கெட்டுகள் மாத்திரம் கைசமிருந்தது.

ரொஸ்டன் சேஸ் வீசிய 49 ஓவரில் லோகன் வென் பீக் மற்றும் ஆர்யான் டுட் ஆகியோர் அபாரமாக ஆடி 21 ஓட்டங்களை பெற கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. அல்ஷாரி ஜோசப் வீசிய இறுதி ஓவரின் முதல் பந்தில்  லோகன் வென் பீக் பௌண்டரியை அடித்தாலும், கடைசி பந்தில் ஒரு ஓட்டம் என்ற நிலையில், லோகன் வென் பீக் ஜேசன் ஹோல்டரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனவே போட்டி சமனிலையாகியது.

லோகன் வென் பீக் 14 பந்தில் 28 ஓட்டங்களை பெற்றதுடன் வெற்றியை தீர்மானிக்கும் சுபர் ஓவரில் துடுப்பெடுத்தாட களமிறங்கினார். ஜேசன் ஹோல்டரின் சுபர் ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக இவர் 30 ஓட்டங்களை விளாச, மீண்டும் பந்துவீச களமிறங்கி வெறும் 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து நெதர்லாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

>> அழுவதற்கு நேரமில்லை; நாம் மீண்டெழுவோம்

நெதர்லாந்து அணியின் இந்த வெற்றியானது ஒருநாள் கிரிக்கெட்டில் பெறப்பட்ட சிறந்த வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை (374) சமப்படுத்திய அணியாக நெதர்லாந்து அணி மாறியதுடன், சுபர் ஓவர் ஒன்றில் (ஒருநாள் மற்றும் T20I) அதிகூடிய ஓட்டங்களை (30 ஓட்டங்கள்) பெற்ற அணியாகவும் மாறியது.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கிண்ண தகுதிகாண் சுபர் சிக்ஸ் சுற்றுக்கு 2 புள்ளிகளுடன் நெதர்லாந்து அணி செல்வதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 2 புள்ளிகளை இழந்து உலகக் கிண்ணத்துக்கு தகுபெறும் வாய்ப்பை மோசமாக்கிக்கொண்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<