புதிய டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள்

320

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (05) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்ட பெட் கம்மின்ஸ் வாழ் நாள்   அதியுயர் முன்னேற்றத்துடன் முதற்தடவையாக பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தொடர் ….

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. குறிப்பிட்ட இந்த டெஸ்ட் தொடர்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வேகப்பந்து வீச்சாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெட் கம்மின்ஸ், மூன்றாவது இடத்திலிருந்து முதல் தடவையாக பந்து வீச்சாளர்கள் வரிசையில் 878 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்திருந்த இவர், இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சனை பின்தள்ளி இரண்டாவது இடத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு முன்னேற்றமாக 25வது இடத்திலிருந்த மிட்செல் ஸ்டார்க், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் ஊடாக 10 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக அவுஸ்திரேலிய அணி சார்பில், மெர்னஸ் லெபுச்செங் 20 இடங்கள் முன்னேறி 54வது இடத்தை பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியின் முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் கெமார் ரொச் ஆகியோர் முன்னேற்றங்களை கண்டுள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட சகலதுறை வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்திருந்த ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் ஹோல்டர் நான்கு இடங்கள் முன்னேற்றத்துடன், பந்து வீச்சாளர்கள் வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜேசன் ஹோல்டர் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கெமார் ரொச் 8 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தங்களுடைய அணி வீரரான செனோன் கேப்ரியலை விட ஒரு இடம் பின் தள்ளியுள்ளார். 1996ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர், மேற்கிந்திய தீவுகளின் 3இற்கும் அதிகமான பந்து வீச்சாளர்கள் ஐசிசி தரவரிசையில், முதல் 12 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் கார்ட்லி எம்ரோஸ் (01), கார்ட்னி வோல்ஸ் (05), இயன் பிசோப் (07) மற்றும் கென்னி பென்ஜமின் (12) ஆகியோர் முதல் 12 வீரர்களுக்குள் இடம் பிடித்திருந்தனர்.

இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…..

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பாரிய மாற்றங்கள் ஏற்படாத போதும், இலங்கை அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த உஸ்மான் கவாஜா 3 இடங்கள் முன்னேறி, 13வது இடத்தை தக்க வைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக 161 ஓட்டங்களை குவித்த ட்ராவிஷ் ஹெட் 23 இடங்கள் முன்னேறி 20வது இடத்தையும், ஜோ பேர்னஸ் 68வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை பொருத்தவரை, கிரைக் பிராத்வைட் (33), சேன் டொவ்ரிச் (45), ஷேய் ஹோப் (46), டெரன் பிராவோ (55) ஆகியோர் முன்னேறியுள்ளதுடன், இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ் (23) மற்றும் பென் போகஸ் (64) ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவில், இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் தரவரிசையில் முன்னேற்றம் காணவில்லை. இலங்கை சார்பில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த திமுத் கருணாரத்னவும் 11வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், டெஸ்ட் தொடரில் தோல்வியுற்ற இலங்கை அணி தொடர்ந்தும் தரவரிசையில் 6வது இடத்தை தக்கவைத்துள்ள போதிலும், 2 புள்ளிகளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.