டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் 94ஆவது போட்டியில் பலம் கொண்ட இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகம் தொடரில் தமது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியின் 25 நிமிடங்கள் கடந்த நிலையில் கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணியின் அபீஸ் ஒலொய்மி கோலாக மாற்றினார்.

அபீஸின் கோல் மூலம் முதல் பாதியில் சுபர் சன் அணி முன்னிலை பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இரண்டாவது பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவடைந்தமையினால் சுபர் சன் வெற்றியைத் தமதாக்கியது.

DCL தொடரின் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழத்தை வீழ்த்தி இலங்கை கால்பந்து ரசிகர்களை தம் பக்கம் திரும்ப வைத்த சுபர் சன் அணி, தற்பொழுது இராணுவப்படை அணியையும் வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளைப் பெற்றுள்ள அவ்வணி, சம்பியன் கிண்ணத்திற்கு போட்டி போடும் அணிகளில் தொடர்ந்து தமது இடத்தையும் முன்னிலைப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் சில போட்டி முடிவுகள்

பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் 1 –  0 மொறகஸ்முல்ல யுனைடட் வி.க

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 2 -2 அப் கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்