உபுல் தரங்க, ஆப்கானின் அதிரடியுடன் மஹாராஜாஸை வீழ்த்திய லயன்ஸ்

Legends League Cricket 2022

5756
ndian Maharajas Vs Asia Lions

ஓமானில் நடைபெற்றுவரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில், இன்று (24) நடைபெற்ற இந்திய மஹாராஜாஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா மஹாராஜாஸ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆசிய லயன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

>> தமது பெயர் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட லக்னோவ் அணி

தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரொமேஷ் களுவிதாரனவுடன் ஜோடி சேர்ந்த உபுல் தரங்க மீண்டும் ஒருமுறை தன்னுடைய சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். மறுமுனையில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய களுவிதாரன 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய மொஹமட் யூசுப்புடன் உபுல் தரங்க 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இந்த தொடரில் தொடர்ச்சியாக தன்னுடைய மூன்றாவது அரைச்சதத்தை பதிவுசெய்து ஆசிய லயன்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

மொஹமட் யூசுப் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அஸ்கர் ஆப்கான், இந்திய மஹாராஜாஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். மறுமுனையில் 4 சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 45 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து உபுல் தரங்க ஆட்டமிழந்து வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அஸ்கர் ஆப்கான் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 28 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இறுதியாக, மிஷ்பா உல்-ஹக் 7 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, ஆசிய லயன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அமித் பண்டாரி 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா மஹாராஜாஸ் அணி, வசீம் ஜெப்பர் மற்றும் மன்பிரீட் கோனி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஆசிய லயன்ஸ் அணியின் அபார பந்துவீச்சின் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 140 ஓட்டங்களை விளாசிய நமன் ஓஜா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் வசீம் ஜெப்பர் வேகமாக ஓட்டங்களை குவித்தார். டில்ஹார பெர்னாண்டோவின் முதல் ஓவரில் முதல் 3 பந்துகளிலும் பௌண்டரிகளை விளாசினார். எனினும், குறித்த ஓவரில் டில்ஹார பெர்னாண்டோ பத்ரிநாத்தின் விக்கெட்டினை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் மொஹமட் கையிப் உபாதை காரணமாக வெளியேற, அடுத்த பந்தில் வசீம் ஜெப்பர் சொஹைப் அக்தாரிடம் பிடிகொடுத்து 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனவே 52 ஓட்டங்களுக்கு தங்களுடைய 3 விக்கெட்டுகளை இந்திய மஹாராஜாஸ் அணி இழந்தது.

ஸ்டுவர்ட் பின்னி மற்றும் யூசுப் பதான் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை பகிர ஆரம்பிக்க, மொஹமட் ரபீக்கின் பந்துவீச்சில் பின்னி ஆட்டமிழந்தார். தொடர்ந்து அஸ்கர் ஆப்கான் வீசிய ஓவரில் யூசுப் பதான் மற்றும் மொஹமட் கைப் ஆட்டமிழக்க ஆசிய லயன்ஸ் அணி பக்கம் போட்டி திரும்பியது. இதில், அவிஷ்கர் செல்வி மற்றும் மன்பிரீட் கோனி ஆகியோர் இறுதி தருணத்தில் நெருக்கடியை கொடுத்த போதும், நுவான் குலசேகரவின் சிறந்த இறுதிநேர ஓவர்களால், போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மன்பிரீட் கோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் நுவான் குலசேகர வெறும் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொஹமட் ரபீக் மற்றும் அஸ்கர் ஆப்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியுடன், தங்களுடைய 3 போட்டிகளில் ஆசிய லயன்ஸ் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<