கோஹ்லியின் பெயரை கூச்சலிடும் ரசிர்களுக்கு பதில் கூறும் நவீன் உல் ஹக்

IPL 2023

161
I enjoy it Naveen-ul-Haq on the Kohli...Kohli taunts

IPL போட்டியின் போது மைதானத்தில் தனக்கு எதிராக கோஹ்லி! கோஹ்லி! என கூச்சலிடுவதை பார்த்து ரசிப்பதாக லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

IPL தொடரில் எலிமினேட்டர் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

>> அபார பந்துவீச்சோடு குவாலிபையர் போட்டிக்கு தெரிவான மும்பை

லக்னோவ் அணி தோல்வியடைந்தாலும் அற்புதமாக பந்துவீசிய நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இந்தப் போட்டி மற்றும் இதற்கு முந்தைய போட்டிகளிலும் நவீன் உல் ஹக் விளையாடும் போதும், பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடும் போதும் ரசிகர்கள் கோஹ்லியின் பெயரைக்கூறி தொடர்ச்சியாக கூச்சலிட்டு வருகின்றனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கோஹ்லி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் ரசிகர்கள் இவ்வாறு மைதானங்களில் கூச்சலிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே ரசிகர்கள் இவ்வாறு கூச்சலிடுவதை தான் ரசிப்பதாக நவீன் உல் ஹக் கூறியுள்ளார்.

“நான் அதை ரசிக்கிறேன். மைதானத்தில் உள்ள அனைவரும் அவரது பெயரையோ (கோஹ்லி) அல்லது வேறு எந்த வீரரின் பெயரையோ உச்சரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த விடயம் அளிக்கிறது.

நான் ஆடுகளத்திற்கு வெளியில் இருந்து வரும் சத்தத்திற்கு கவனம் செலுத்துவதில்லை. எனது சொந்த கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கூட்டமாக கூச்சலிட்டால் அல்லது யாராவது ஏதாவது கூறினால் அது என்னைப் பாதிக்காது.

தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருநாள் நாம் சரியாக பிரகாசிக்காவிட்டால் ரசிகர்கள் இவ்வாறு கூச்சலிடுவார்கள். மற்றொரு நாள் அவர்களுடைய அணிக்காக பிரகாசிக்கும் போது உங்களுடைய பெயரை அதே ரசிகர்கள் உச்சரிப்பார்கள்” என்றார்.

IPL தொடரில் முதல் குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை சுபர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அதேநேரம் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை வெள்ளிக்கிழமை (26) இரண்டாவது குவாலிபையர் போட்டியில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<