மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க

57

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பொது மக்கள் எண்ணுவது பற்றி நேர்காணல் ஒன்றை பிரபல கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கின்றார்.

இந்த நேர்காணலில் நீண்ட நேரத்திற்கு தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்த தனுஷ்க குணத்திலக்க  தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என மறுத்திருக்கின்றார். 

”சிலருக்கு பொறாமை அதிகமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் எனது வாழ்க்கை முறை ஏனைய இலங்கை கிரிக்கெட் வீரர்களை விட வித்தியாசமானமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். அப்படி இருப்பதால், நான் கெட்டவன் என அர்த்தம் கிடையாது. பலர் சமூக வலைதளங்களில் இருப்பவற்றை மட்டும் பார்த்துவிட்டு கருத்து வெளியிடுகின்றனர். அவர்கள் வெளியிடும் எந்தக் கருத்துக்களும் உண்மை கிடையாது.” 

”சிலர் நான் கர்வம் கொண்டவன் என நினைக்கின்றனர். நான் உண்மையில் அப்படி கிடையாது. யாராவது என்னிடம் பேசினால் அதனை அவர்களுக்கு தெரிந்து கொள்ள முடியும். இலங்கையில் இருக்கும் அதிகமானோர் கலச்சார விடயங்களில் ஒரு நபர் நேரகாலத்தோடு திருமணம் முடிக்க வேண்டும் என்பது போல், ஒரு சிறந்த (கிரிக்கெட்) வீரராக இருப்பவர் நேரகாலத்தோடு அறைக்குச் சென்று தூங்குபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி இருக்காத போது எமது தனிப்பட்ட இயல்புகள் குறித்து அவர்கள் இஷ்டத்திற்கு கதைகளை உருவாக்குகின்றனர். இவை எனது கிரிக்கெட் வாழ்க்கையோடு எப்படி தொடர்புட முடியும்?”

”நான் பார் (Bar) ஒன்றுக்கு எனது நண்பர்களுடன் சென்றால், நான் இளைப்பார மட்டுமே அங்கு சென்றிருப்பேன். ஆனால், என்னை அங்கே யாராவது பார்க்கும் சந்தர்ப்பத்தில் நான் குடித்து கும்மாளம் போட்டு கிரிக்கெட் ஆட முடியாமல் இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், (கிரிக்கெட் வீரர்களுக்கான) yo-yo பரிசோதனையை பாருங்கள். நானே (குறித்த பரிசோதனையில்) உடற்தகுதி என்று வரும் போது அணியில் முதல் மூன்று இடங்களுக்குள் வருகின்றேன். எனது வாழ்க்கைமுறை எனக்கு ஆறுதலைத் தருகின்றது.”   

“எனக்கு மறைவு வாழ்க்கை என்று ஏதும் கிடையாது. அவர்கள் எப்போதும் நான் கிளப்பிங் (Clubbing) போவதாக சொல்கின்றார். ஆனால், அப்படி கிடையாது. கடந்த மூன்று மாதங்கள் நான் கொழும்பில் இல்லையென்று கூறியது உண்மை இல்லை. எனக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால்? நான் காலிக்கு செல்வேன், அங்கே நான் தொடர்ந்தும் செல்லும் பார் ஒன்று உள்ளது. அங்கே சுற்றுலாப் பயணிகளே அதிகம் இருப்பர். எனவே, என்னை யாரும் அடையாளம் காண முடியாது. ஆனால், நான் கொழும்பில் வெளியில் செல்லும் போது என்னை பலருக்கும் தெரியும். இது சில நேரங்களில் எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அப்போது என்னால், என்னைப் போன்று இருக்க முடியாது.”

மாலனின் அதிரடி சததத்தால் நியூஸிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டேவிட்…..

அதேநேரம், குணத்திலக்க கடந்த ஆண்டு (2018) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் விதிமுறைகளை மீறி வெளியில் சென்று பாலியல் புகார் ஒன்றில் மாட்டி பின்னர் குற்றமற்றவர் என நிரூபணம் ஆன விடயம் தொடர்பிலும் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 

”அதில் எனது பக்கத்தில் இருந்து பொறுப்பற்ற முடிவு ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. எனக்கு நான் தவது ஒன்றினை செய்து விட்டேன் என்பது தெரியும். நான் விதிமுறைகளை மீறினேன். போட்டியின் பின்னர் நான் எனது சக அணி வீரர்களிடமும் (இலங்கை) கிரிக்கெட் சபையிடமும் மன்னிப்புக் கேட்டிருந்தேன். எனினும் பொலிஸ் ஆர்வம் காட்டியது போன்று நான் எதனையும் செய்திருக்கவில்லை. அதனை விளையாட்டு அமைச்சரும் ஊடகங்களிடம் தெளிவாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் நான் சிறந்த ஆட்டத்தினையும் வெளிப்படுத்தினேன். எனினும், நான் விதிமுறைகளை மீறி (வெளியில்) சென்றமைக்காக அப்போது புனையப்பட்ட கதைகளையே ஊடகங்கள் கதைத்தன.”

இன்னும் இலங்கை கிரிக்கெட் அணியில் தனக்கு உதவியாக இருந்த கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் கூறிய தனுஷ்க குணத்திலக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்க தனக்கு மிகப் பெரிய ஆதரவினை அவர் பயிற்சியாளராக இருந்த போது வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார். 

மூலம் – Cricinfo 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<