ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளின் டெஸ்ட் பிரவேசம்

243

அயர்லாந்து கிரிக்கெட் அணியும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும் கடந்த ஆண்டு ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ நாடுகளாக மாறியதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டன.  

இதன்படி, அயர்லாந்து அணி தமது முதல் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) பாகிஸ்தானுடன் விளையாடியிருந்தது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்ட 11 ஆவது நாடாக அவ்வணி பதிவாகியது.   

அயர்லாந்தின் கன்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

கடந்த ஆண்டு ஐ.சி.சி. இன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் ஒன்றான அயர்லாந்து …

இன்னும் சில நாட்களில் ஆப்கானிஸ்தான் அணியும் தமது கன்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 12 ஆவது நாடாக மாறவிருக்கின்றது.

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒருபுறமிருக்க, கடந்த தசாப்த ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்ட 9 ஆவது, 10 ஆவது நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றின் டெஸ்ட் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை ஒரு முறை மீட்டுவோம்.  

ஜிம்பாப்வே அணியின் டெஸ்ட் அந்தஸ்து

ஜிம்பாப்வே அணி 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் .சி.சி. இன் முழு அங்கத்தவராக மாறியதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டது.

முதல் டெஸ்ட் போட்டி  

ஜிம்பாப்வே எதிர் இந்தியா (ஒக்டோபர் 18-22, 1992)

இடம்ஹராரே விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே

முடிவுபோட்டி சமநிலையில் முடிந்தது.

ஆட்ட நாயகன்டேவிட் ஹூக்டன் (ஜிம்பாப்வே)

முதல் டெஸ்ட் போட்டியின் கதை

1992 ஆம் ஆண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் அடங்கிய சுற்றுப் பயணத்தில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வேயிற்குச் சென்றிருந்தது.

இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக ஆரம்பமாகிய (ஒரு போட்டி கொண்ட) டெஸ்ட் தொடரின் மூலம் ஜிம்பாப்வே அணி தமது கன்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் ஆடியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் டேவிட் ஹூக்டன் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார். இதன்படி ஜிம்பாப்வே அணியினர் தமது முதல் இன்னிங்சுக்காக மலைக்கவைக்கும் விதத்தில் 462 ஓட்டங்கள் குவித்திருந்தனர். இதில் அவ்வணியின் தலைவர் ஹூக்டன் 121 ஓட்டங்களினையும், கிரேண்ட் ப்ளோவர் 82 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

ஜிம்பாப்வே அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த டேவிட் ஹூக்டன்

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணியினர் 169.4 ஓவர்களில் 307 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் சார்பில் சன்ஜேய் மன்ஜேர்க்கார் சதம் கடந்து 104 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். எனினும், சன்ஜேய் இந்த சதத்துக்காக 500 நிமிடங்களினையும், 422 பந்துகளினையும் எடுத்துக் கொண்ட காரணத்தினால் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் பெறப்பட்ட மெதுவான சதங்களில் ஐந்தாவது இடத்தினை அது பிடித்திருந்தது.  

இதன் பின்னர் ஆரோக்கியமான முன்னிலை (155) ஒன்றுடன் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணியினர் போட்டியின் இறுதி நாள் நிறைவின் போது 146 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். இதனால், ஜிம்பாப்வே அணியின் முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த வகைப் …

இப்போட்டியின் போது சிறப்பாக செயற்பட்ட பந்துவீச்சாளராக ஜிம்பாப்வே சுழல் வீரர் ஜோன் ட்ரைகோஸினை குறிப்பிட்ட முடியும். 1970ஆம் ஆண்டு, தென்னாபிரிக்க அணிக்காக அறிமுகமாயிருந்த ட்ரைகோஸ் பின்னர், தென்னாபிரிக்க அணியில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்த காரணத்தினால், தனது 45 ஆவது வயதில் ஜிம்பாப்வே அணியின் கன்னி டெஸ்ட் போட்டியின் மூலம் இரண்டாவது நாடு ஒன்றுக்கு விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தார். குறித்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உட்பட மொத்தமாக இந்திய அணியின் 5 வீரர்களின் விக்கெட்டுக்களை ட்ரைகோஸ் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றியினைப் பெற்றுக் கொள்ள மிக நீண்ட காலம் தேவைப்பட்டிருந்தது. தமது 30 ஆவது டெஸ்ட் போட்டியிலேயே அவர்களுக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது.

1995 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியினை ஹராரேயில் வைத்து எதிர் கொண்டிருந்த ஜிம்பாப்வே அணியினர், முதலில் துடுப்பாடி 544 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை முடித்திருந்தனர். இதில் கிரேன்ட் ப்ளோவர் ஆட்டமிழக்காது 201 ஓட்டங்களினையும் அவரது சகோதரர் என்டி ப்ளோவர் 156 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.

பின்னர், ஹீத் ஸ்ட்ரேக் பந்துவீச்சில் அசத்த பாகிஸ்தான் அணியினர் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ஓட்டங்களால் ஜிம்பாப்வேயிடம் தோல்வியினைத் தழுவினர். இப்போட்டியின் மூலம் தமது கன்னி டெஸ்ட் வெற்றியினை ஜிம்பாப்வே பெற்றிருந்தாலும், குறித்த போட்டி இடம்பெற்ற டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்டிருந்த காரணத்தினால் தொடரினை 2-1 என பாகிஸ்தான் அணியே கைப்பற்றியிருந்தது.

பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் அந்தஸ்து

பங்களாதேஷ் அணியானது 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் .சி.சி. இன் முழு உறுப்புரிமையினைப் பெற்றுக்கொண்டு, மூன்று மாதங்களிலேயே கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக் கொண்டது.

முதல் டெஸ்ட் போட்டி

பங்களாதேஷ் எதிர் இந்தியா

இடம் –  பங்காபந்து தேசிய மைதானம், டாக்கா (நவம்பர் 10-13, 2000)

முடிவுஇந்தியா  9 விக்கெட்டுக்களால் வெற்றி

ஆட்ட நாயகன்சுனீல் ஜோஷி (இந்தியா)

முதல் டெஸ்ட் போட்டியின் கதை

தமது முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சுக்காக 400 ஓட்டங்களினைக் குவித்திருந்தது. பங்களாதேஷ் அணியின் சார்பில் அமினூல் இஸ்லாம் 145 ஓட்டங்களினையும், ஹபிபுல் பசார் 71 ஓட்டங்களினையும் சேர்த்து சிறப்பாக செயற்பட்டு இருந்தனர்.

புதிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?

கிரஹம் லப்ரோய் தலைமையிலான தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் …

தம்முடைய கன்னி டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி பலமிக்க இந்தியாவுக்கு எதிராக 400 ஓட்டங்களினைக் குவித்திருந்த காரணத்தினால், பங்களாதேஷ் அணி தமது முதல் டெஸ்ட் போட்டியினை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணி 429 ஓட்டங்களினைப் பெற்று அந்த எதிர்பார்ப்புக்களை தகர்த்திருந்தது.

பின்னர், இரண்டாம் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தினை காண்பித்த பங்களாதேஷ் அணியினர் வெறும் 91 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். இந்திய அணிக்காக ஏற்கனவே துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டிருந்த சுனீல் ஜோஷி பங்களாதேஷ் அணியினை குறைவான ஓட்டங்களுக்குள் மடக்க பந்துவீச்சிலும் உதவியிருந்தார். இவை அனைத்தினையும் அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 63 ஓட்டங்களினை ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து இந்தியா அடைந்தது.

முதல் டெஸ்ட் வெற்றி

பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து அடுத்த நான்கு ஆண்டுகளிலும் மிக மோசமான பதிவினையே காட்டி வந்திருந்தது. பங்களாதேஷ் அணியினர் விளையாடிய முதல் 33 டெஸ்ட் போட்டிகளில் 29 போட்டிகளில் தோல்வியினையே தழுவியிருந்தனர்.

தமது முதல் டெஸ்ட் வெற்றியினைக் கொண்டாடும் பங்களாதேஷ் அணியினர்

எனினும் 2005 ஆம் ஆண்டு சிட்டகொங்கில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டியின் மூலம், பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே அணிக்கெதிராக தமது முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்திருந்தது. குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணியினால் நிர்ணயம் செய்யப்பட்ட 381 ஓட்டங்கள் என்கிற கடின இலக்கினை அடைய ஆடிய ஜிம்பாப்வே அணியினர் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். இதன்படி, 226 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி போட்டியில் வெற்றி பெற்றது.  பங்களாதேஷின் முதல் டெஸ்ட் வெற்றிக்கு வெறும் 54 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றி சுழல் வீரரான எனாமுல் ஹக் உதவியிருந்தார்.

தமது முதல் டெஸ்ட் வெற்றியினை அடுத்து பங்களாதேஷ் அணியினர், டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த நாடுகளான இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைப் பதிவு செய்து தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…