வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு

192

‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது.  

 யாழ்ப்பாண நிகழ்வின் புகைப்படங்கள் 

கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாளில் (15) கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் இருக்கும் பாடசாலைகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் கூட்டு உதவியுடன் பீட்டர் வூட்ஸ் மற்றும் இன்தி மரிக்கார் போன்ற ரக்பி விளையாட்டில் இணைந்தவர்கள் ரக்பி விளையாட்டின் சுவையை போட்டி நிறைவில் வழங்கினர்.

ரக்பி விளையாட்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் பிரதான நோக்கில் உலக ரக்பி சம்மேளனத்தின் திட்டமாக இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியை இலங்கை ரக்பி சம்மேளனம் ஏற்பாடு செய்தது.

25 மாவட்டங்கள் மற்றும் 99 கல்வி வலயங்களில் ரக்பி விளையாட்டை வளர்க்கச் செய்யும் நோக்கில் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சி பொலன்னறுவை மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து களுத்துறை, மஹியங்கனை மற்றும் குளியாப்பிட்டிய போன்ற இடங்களிலும் இடம்பெற்றன.   

இந்த நிகழ்ச்சி, யாழ்ப்பாணத்தில் பெருமளவான எதிர்பார்ப்புகளோடு ரக்பி விளையாட்டை அறிமுகம் செய்வதற்கும், புதிய திறமைகளை கண்டறிவதற்கும் உறுதியான அஸ்திவாரத்தை இட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஆண்டுகளில் ரக்பி விளையாட்டுக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 கிளிநொச்சி நிகழ்வின் புகைப்படங்கள் 

பயிற்றுவிப்பாளர்கள் பல்வேறு பயிற்சிகள் மற்றும் போட்டியில் அணியை அமைப்பது குறித்து எளிய வழியில் விளக்கினார்கள். போட்டியை பற்றி கற்கும் செயல்முறை அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்கள் புன்னகையோடே கற்றுக்கொண்டனர்.

இலங்கையில் ரக்பி விளையாட்டு தலைநகரை சுற்றி மையம் கொண்டிருப்பதோடு அது மத்திய பிராந்தியத்திற்கு பரவியுள்ளது. காலி மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் இந்த விளையாட்டுக்கு சிறிய அளவு பிரதிநிதித்துவமே உள்ளது. யாழ்ப்பாணத்தின் உள்ளூர் மக்கள் இந்த விளையாட்டு பற்றி குறைந்த அளவே தெரிந்துள்ளனர்.

எனினும் இந்த நிகழ்ச்சி மூலம் அடுத்த ஆண்டுகளில் மேலும் பல பாடசாலைகள் இந்த விளையாட்டை எடுத்துக் கொள்ளும் என்று இலங்கை ரக்பி சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.

ரக்பி விளையாட்டில் பங்கேற்பவர்களை அதிகரிக்கும் முயற்சியாக இந்நிகழ்வின்போது பாடசாலைகளுக்கு ரக்பி பந்துகள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக இந்த பாடசாலைகளுக்கு மீண்டும் செல்வதற்கு இலங்கை ரக்பி சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.