அசிப் அலி, பரீட் ஆகியோருக்கு அபாராதம் விதித்த ஐசிசி!

Asia Cup 2022

235

ஆசியக்கிண்ணத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அசிப் அலி மற்றும் பரீட் அஹ்மட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் புதன்கிழமை (07) ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அஹ்மட் மற்றும் பாகிஸ்தானின் அசிப் அலி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

>> இறுதிப் போட்டி ஒத்திகையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள்

போட்டியின் 19வது ஓவரில் பரீட் அஹ்மட் வீசிய பந்தில் அசிப் அலி ஆட்டமிழந்தார். இதன்போது ஆக்ரோஷமான முறையில் பரீட் அஹ்மட், அசிப் அலியை வழியனுப்பிவைக்க, அசிப் அலி அவருடன் மோதிக்கொண்டார். எனினும், நடுவர்கள் மற்றும் வீரர்கள் இணைந்து குறித்த மோதலை தடுத்திருந்தனர்.

எனினும், ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “அசிப் அலியின் ஆட்டமிப்பை தொடர்ந்து பரீட் அஹ்மட் விதிமுறையை மீறி ஆக்ரோஷமாக செயற்பட்டார். அத்துடன், அசிப் அலியும் ஆக்ரோஷமான முறையில் செயற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இருவரும் ஐசிசியின் முதல் அடுக்கு குற்றத்தை புரிந்துள்ளதன் காரணமாக, அவர்களுடைய போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் தலா ஒவ்வொரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நசீம் ஷா இறுதி ஓவரில் விளாசிய இரண்டு சிக்ஸர்களுடன் பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவுசெய்ததுடன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட தகுதிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<