டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக சீலாமுனை யங் ஸ்டார்

436

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தும், “டான் கிண்ண” கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாவலடி கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகத்தினை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் முதலாவது அணியாக மாறியுள்ளது.

ஒகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகியிருந்த இந்த சுற்றுத் தொடரில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரிவு A (டிவிஷன் A)  இற்குரிய 14 முன்னணி கால்பந்து கழகங்கள் பங்குபற்றியிருந்தன. தொடரின் முதற்கட்ட போட்டிகள் யாவும் நொக்அவுட் ஆட்டங்களாக நடைபெற்றிருந்தன.

கெண்ட் கிக் கிண்ணத்தை சுவீகரித்த ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்

நிந்தவுர் கெண்ட் விளையாட்டுக் கழகம்…

இந்த நொக்அவுட் ஆட்டங்களின் மூலம் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்த யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் அப்போட்டியில் நாவற்குடா கிரின் லைட் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தியும், கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகம் புன்னோச்சோலை கோப்ரா விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தியும் அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியிருந்தன.

இரண்டு அணிகளும் இறுதிப் போட்டி கனவுகளுடன் மோதியிருந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் தொடக்கத்திலேயே சாதூர்யமான கவுண்டர் தாக்குதல்கள் மூலம் எதிரணியின் பெனால்டி பகுதிக்கு அண்மையில் பந்தினை கொண்டு சென்று பல முயற்சிகளை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மேற்கொண்டிருந்தது. எனினும் பலமான பின்கள வீரர்களுடன் நாவலடி கோல்ட் பிஷ் அணி அவர்களின் முயற்சிகளை முறியடித்தது.  

இவ்வாறானதொரு தருணத்தில், கோல்ட் பிஷ் அணிக்கும் கோல் பெறுவதற்கு இலகு வாய்ப்பு ஒன்று கிட்டியது. இருந்தபோதிலும் அவ்வாய்ப்பினை சரியாக அவ்வணியினர் உபயோகித்திருக்கவில்லை.   

தொடர்ந்து பந்தின் ஆதிக்கத்தினை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகமே எடுத்துக்கொண்டது. ஆக்ரோசமான ஆட்டத்தினை யங் ஸ்டார் அணியினர் காட்டியிருந்த போதும் பலமான தடுப்பு ஒன்றினை வைத்திருந்த கோல்ட் பிஷ் அணியினரை தாண்டி கோல்கள் எதனையும் சீலாமுனை வீரர்களினால் பெற முடியாமல் போனது.

இதனையடுத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கோல்ட் பிஷ் அணிக்கு கிட்டியது. இவ்வாய்ப்பினை துரிதகதியிலான ஆட்டம் மூலம் சரிவர பயன்படுத்திய T.  நிசாந்தன் தமது அணிக்காக முதல் கோலினை போட்டியின் 25ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டார்.  

போட்டியின் முதல் கோலுடன் ஆட்டம் சூடுபிடிக்க உற்சாகமான முறையில் செயற்படத் தொடங்கிய யங் ஸ்டார் அணியினரும், முதல் கோல் போடப்பட்டுஆறு நிமிடங்கள் கழித்து P. சுதாகரன் போட்ட கோலுடன் போட்டியினை சமநிலைப்படுத்தினர்.

ரினௌன் – சௌண்டர்ஸ் இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவு

அடுத்து, எதிரணியின் பின்கள வீரர்களை தந்திரமான முறையில் கடந்து சென்ற S. ஜனுபன் மேலும் ஒரு கோலினை போட்டியின் 43 ஆவதுநிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார். இதனால் போட்டியின் முதற்பாதி யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.

முதல் பாதி: யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2 – 1 கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகம்

போட்டியின இரண்டாம் பாதி கோல்ட் பிஷ் அணியினரின் ஆதிக்கத்துடன் ஆரம்பமானது. 47 ஆவது நிமிடத்தில் அவ்வணி வீரர் J. மகிந்தகுமாரினால் போடப்பட்ட இரண்டாவது கோலின் மூலம் போட்டி மீண்டும் சமநிலை அடைந்தது.  

தொடர்ந்து இரண்டு அணியினரும் சம ஆதிக்கத்துடன் போட்டியில் முன்னேறினர். பந்தினை தமது கட்டிற்குள் கொண்டு வந்த யங் ஸ்டார் அணியினர் தமது வாய்ப்புக்களை அதிகரித்துக்கொண்டனர்.

இப்படியாக ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றினை பயன்படுத்திய ஜனுபன்  தனது இரண்டாவது கோலினை 68 ஆவது நிமிடத்தில் பெற்று யங் ஸ்டார் அணியினைமுன்னிலைப்படுத்தினார்.

இந்த கோல் பெறப்பட்டு அடுத்த நிமிடத்திலேயே T. சஞ்சீவ் மேலதிகமாக மற்றும் ஒரு  கோலினையும் பெற நான்கு கோல்களுடன் யங் ஸ்டார் அணி ஒருவலுவான நிலையினை எட்டிக்கொண்டது.

எஞ்சிய நிமிடங்களில் இரண்டு அணிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காது போக, இறுதி விசிலுடன் இறுதிப் போட்டிக்கான தமது வாய்ப்பினை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் உறுதி செய்தது.

முழு நேரம்: யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 4 – 2 கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – S. ஜனுபன்  (சீலாமுனை யங் ஸ்டார்விளையாட்டுக்  கழகம்)

கோல் பெற்றவர்கள்

யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – P. சுதாகரன் 31’, S. ஜனுபன் 38’ & 68’, T. சஞ்சீவ் 69’

கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகம் – T. நிசாந்தன் 25’, J. மகிந்த குமார் 47’