சாதனைகளுக்காக மீண்டும் எழுந்து நிற்கவுள்ள R.பிரேமதாஸ அரங்கம்

2542
Getty Image & AFP
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடர், ஜூலை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

சுமார் 2 வருடங்களாக பிரேமதாஸ மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக எந்தவொரு சர்வதேச போட்டிகளும் அங்கு நடைபெறவில்லை

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய தொடர்

R.பிரேமாஸ மைதானத்தில் இறுதியாக 2019ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில், மீண்டும் R.பிரேமதாஸ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருடன் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை இலங்கை ரசிகர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

ஆனால், இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தத் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கிரிக்கெட் உலகில் பல பெயர் போன மைதானங்கள் உண்டு. அந்த மைதானங்ளில் தான் அதிகளவு சர்வதேசப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. அந்த வரிசையில் இலங்கையை எடுத்துக்கெண்டால் R.பிரேமதாஸ மைதானம் தான் பல சர்வதேசப் போட்டிகளை நடத்திய மைதானமாக வலம்வந்து கொண்டிருக்கிறது

.சி.சியின் ஒருநாள் உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம். சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட போட்டிகளை நடத்திய பெருமை R.பிரேமதாஸ மைதானத்துக்கு உண்டு

அந்தவகையில் R.பிரேமதாஸ மைதானத்தின் வரலாறு என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

LPL தொடரில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறாரா? கூறும் மாலிங்க!

R.பிரேமதாஸ மைதானம் என தற்பொழுது அழைக்கப்பட்டாலும், கொழும்புமாளிகாவத்தை பகுதியில் அமையப் பெற்றுள்ள இந்த மைதானமானது 1994 இற்கு முன்னர் கொழும்பு கெத்தாராம மைதானம் என அழைக்கப்பட்டது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேதாஸ இந்த மைதானத்தை புனர் நிர்மாணிப்பதிலும், அதன் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதிலும் முன்நின்று செயல்பட்ட காரணத்தால் கெத்தாராம என்ற பெயர் R.பிரேமதாஸ மைதானம் என பெயரிடப்பட்டது. அதன்பிறகு தான் R.பிரேமதாஸ மைதானம் 40,000 இருக்கைகளைக் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கிரிக்கெட் அணி அதிகளவு சர்வதேசப் போட்டிகளை இந்த மைதானத்தில் தான் விளையாடியுள்ளது. 1986ஆம் ஆண்டு இலங்கைBமற்றும் இங்கிலாந்துBஅணிகள் இடையே நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற போட்டி தான் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியாகும்

இதனையடுத்து, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேசப் போட்டி R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது

ஆனால், அந்தப் போட்டி நடைபெற்று சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு தான் R.பிரேமதாஸ மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  

இதன்படி, சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தான் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக இடம்பிடித்தது.

 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிப் போட்டி (Highlights) 

அதன்பிறகு டெஸ்ட், ஒருநாள் என பல உள்ளூர், சர்வதேசப் போட்டிகள் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றதுடன், இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய T20i போட்டி தான் அங்கு நடைபெற்ற முதலாவது சர்வதேச T20 போட்டியாக இடம்பிடித்தது

அதன்படி, R.பிரேமதாஸ மைதானத்தில் இதுவரை 9 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 36 T20i போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன

இதில் இலங்கை அணி நான்கு டெஸ்ட், 71 ஒருநாள் மற்றும் நான்கு T20 போட்டிகளில் வென்றுள்ளது. இலங்கையைத் தவிர, இந்த மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளிலும் வெளிநாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.

இருப்பினும், R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்ற T20i போட்டிகள் இலங்கை அணிக்கு அவ்வளவு அதிஷ்டத்தைக் கொடுக்கவில்லை. இலங்கை அணி இதுவரை விளையாடிய 20 T20i போட்டிகளில் 16இல் தோல்வியைத் தழுவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் இலங்கை அணி பல வரலாற்று வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது

இதில் உலகின் மிக உயர்ந்த டெஸ்ட் இன்னிங்ஸ் R.பிரேமதாஸ மைதானத்தில் தான் பதிவாகியது. 1997ஆம் ஆண்டில், இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 952 ஓட்டங்களை எடுத்தது

சனத் ஜயசூரியாவுக்கும், ரொஷான் மஹாநாமவுக்கும் இடையிலான 576 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம் தான் அப்போதைய காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனையாக இடம்பிடித்தது. ஆனால், தற்போது இது உலகின் இரண்டாவது அதிகபட்ச இணைப்பாட்டமாக மாறியுள்ளது

அதேபோல, இந்த மைதானத்தில் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியாக 60 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உலகில் 100 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளை நடத்திய 4ஆவது மைதானமாகவும், இலங்கையில் இதுபோன்ற அதிகளவு போட்டிகளை நடத்திய முதலாவது மைதானமாகவும் R.பிரேமதாஸ மைதானம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது

பானுக ராஜபக்ஷவுக்கு இடைநீக்க தண்டனையுடன் கூடிய அபராதம்!

அதேபோல, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வீரரொருவர் ஒரு மைதானத்தில் வைத்து குவித்த அதிகபட்ச ஓட்டங்கள் சாதனை இந்த மைதானத்தில் தான் பெறப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வரை, இந்த சாதனையை இலங்கையின் சனத் ஜயசூரிய வைத்திருந்தார், அவர் R.பிரேமதாஸ மைதானத்தில் 2,514 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதன்பின்னர், பங்களாதேஷின் தமிம் இக்பால் அந்த சாதனைக்குரியவராக மாறினார்

கடந்த 1996இல் இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தையும், 2011இல் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இதில் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளின் லீக், காலிறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

அதேபோல, .சி.சியின் இரண்டாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

அதிகளவு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் அதிகளவு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்ற மைதானமாக R.பிரேமதாஸ மைதானம் வலம்வருகிறது.

கடந்த 2012 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட ஒன்பது போட்டிகள் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டியில் மழை காரணமாக இறுதிப் போட்டி தடைப்பட இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு சம்பியன் பட்டம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இரண்டு‌‌ ‌‌உலகக்‌‌ ‌‌கிண்ண‌‌ ‌‌தொடர்களை‌‌ ‌‌நடத்த‌‌ ‌‌இலங்கை‌ ‌தயார்‌ ‌ ‌

அதேபோல மீண்டும் 2002இல் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2012 செப்டம்பரில், இலங்கையில் .சி.சியின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்தத் தொடரில் நடைபெற்ற 27 போட்டிகளில் 15 போட்டிகள் R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதில் குறிப்பாக, 2012இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி R.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அந்த வகையில், இலங்கை கிரிக்கெட்டின் பிரதான கேந்திர நிலையங்களில் ஒன்றாக விளங்கும் R.பிரேமதாஸ மைதானம் பல வருடங்களுக்குப் பிறகு புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருடன் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.  

எனவே, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக விரைவில் R.பிரேமதாஸ மைதானத்தில் போட்டிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அதுவரை பொறுமையுடன் இருந்து இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடரை ஜூலை 13ஆம் திகதி முதல் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிப்போம்..

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…