பானுக ராஜபக்ஷவுக்கு இடைநீக்க தண்டனையுடன் கூடிய அபராதம்!

India tour of Sri Lanka 2021

786

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷவுக்கு இடைநீக்க தண்டனை சார்ந்த, ஒரு வருட போட்டித்தடை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பானுக ராஜபக்ஷவுக்கு இடைநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சபையின் ஒப்பந்த கொள்கையை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, அடுத்துவரும் தொடர்களில் பானுக ராஜபக்ஷ தேசிய அணியில் விளையாடலாம். ஆனால், எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள், பானுக ராஜபக்ஷ கிரிக்கெட் சபை நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறுவாராக இருந்தால், அவருக்கு அனைத்துவகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை இலங்கை கிரிக்கெட் சபையால் வழங்க முடியும். எனினும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 5000 அமெரிக்க டொலர் அபராதத்தொகையை கட்டாயமாக பானுக ராஜபக்ஷ செலுத்தவேண்டும்.

இலங்கை கிரிக்கெட்டின் 2019/20 ஒப்பந்த விதிமுறையை மீறி, சமுகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பானுக ராஜபக்ஷவின் இடைநீக்க தண்டனை வெளியாகிய அறிவிப்புடன், இந்திய தொடருக்காக கொழும்பில், உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் 13 வீரர்கள் கொண்ட குழாத்திலும் பானுக ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பானுக ராஜபக்ஷ தேசிய அணிக்கு தெரிவுசெய்வதற்கான உடற்தகுதி மட்டத்தை நிரூபித்துள்ள நிலையில், இவர் மீண்டும் தேசிய அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது. இதேநேரம், நாளைய தினம் (06) பானுக ராஜபக்ஷ உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இணைவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…