ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய தொடர்

India tour of Sri Lanka 2021

116
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடர், எதிர்வரும் ஜூலை 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது. சுமார் 2 வருட காலப்பகுதியில் மைதான புனரமைப்பு காரணமாக எந்தவொரு சர்வதேச போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெறவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஆர்.பிரேமதாஸ  மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருடன் கிரிக்கெட் ஆரம்பிக்கிறது.

தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

ஆர்.பிரேமாஸ மைதானத்தில் இறுதியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், முழுமையாக ரசிகர்கள் இருந்தாலும், இம்முறை நடைபெறவுள்ள ஆறு போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டித் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் செயற்படவுள்ளதுடன். இந்திய அணி இம்மாதம் 29ம் திகதி இலங்கை வரவுள்ளது. இந்திய அணி மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்பதுடன், பின்னர் உயிரியல் பாதுகாப்பு வலையத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கும்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, இந்த தொடரானது கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய தொடராக அமையும். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளங்கிய அணிகள். அவர்கள் உற்சாகமான கிரிக்கெட்டை ஆடுவதால், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரில் ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக் தொடருக்கான 30 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம், T20I போட்டிகள், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்கு சிறந்த ஆயத்தமாக அமையும்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடருக்கு முன்னர், இலங்கை அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 13 – ஆர். பிரேமதாஸ – பி.ப. 2.30
  • இரண்டாவது ஒருநாள் போட்டி-  ஜூலை 15  – ஆர். பிரேமதாஸ – பி.ப. 2.30
  • மூன்றாவது ஒருநாள் போட்டி –  ஜூலை 18 –  –  ஆர். பிரேமதாஸ – பி.ப. 2.30
  • முதல் T20I போட்டி –  ஜூலை 21 – ஆர். பிரேமதாஸ – பி.ப. 7.00
  • இரண்டாவது T20I போட்டி – ஜூலை 23 – ஆர். பிரேமதாஸ – பி.ப. 7.00
  • மூன்றாவது T20I போட்டி – ஜூலை 25 – ஆர். பிரேமதாஸ – பி.ப. 7.00

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…