வரலாறு படைத்த டெஸ்ட் வீரர்கள் இலங்கை வருகை

1997

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத இலங்கை டெஸ்ட் அணியின் பதில் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஏனைய வீரர்கள் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் திங்கட்கிழமை (25) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் சம்மி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஜரோம் ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க…

அணியினரை வரவேற்ற மொஹான் டி சில்வா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வ பெர்னாண்டோவின் சிறப்பான ஆட்டம் பற்றி குறிப்பிட்டுக் கூறியதோடு தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் பின்னணியில் செயற்பட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தென்னாபிரிக்காவில்  முதலாவது விருந்தினர் ஆசிய அணித்தலைவராக டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை தோற்கடித்த திமுத் கருணாரத்ன இலங்கை வந்திறங்கிய பின் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

எமது அணியின் கூட்டு முயற்சியே பிரதானமாக இந்த வெற்றிக்குக் காரணமாகும். புது வீரர்களான ஓஷத, லசித் மற்றும் விஷ்வ அபாரமாக செயற்பட்டனர், அதேபோன்று எமது பந்துவீச்சாளர்களின் திறமையும் மறக்க முடியாதது. இரு போட்டிகளிலும் எமக்கு குறைவான ஓட்ட வெற்றி இலக்கை தருவதற்கு அவர்கள் செயற்பட்டனர்” என்று கூறினார்.  

Photos: Post – Series Media Briefing | Sri Lanka Test Squad from South Africa 2019

இந்த தொடரில் செய்த வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாரத்ன, “என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றி நானும் உப தலைவர் திக்வெல்லவும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் பேசினோம். கடந்த கால தோல்விகளை மறந்து புத்தம்புது உணர்வுடன் இந்த தொடருக்கு முகம்கொடுக்க நாம் விரும்பினோம். நாம் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை கொடுத்து அணியாக எமது இலக்கை துரத்தினோம்” என்று குறிப்பிட்டார்.

“உடைமாற்றும் அறையின் அந்த வீடியோ வெளியாகி இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது பற்றி நான் ஏமாற்றம் அடைகிறேன்” என்று சமூகதளத்தில் வைரலாக பரவிய வீடியோ பற்றி கருணாரத்ன குறிப்பிட்டார்.

அணியின் செயற்பாடு குறித்து அவர் மேலும் கூறும்போது, “வீரர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை நாம் குறைக்க வேண்டி இருந்தது. அவர்களுக்கு தம்மை அனுபவிக்க சுதந்திரம் வழங்கப்பட்டதோடு அது படிப்படியாக  வீரர்களின் வலுவான அணி உணர்வை தூண்டியது” என்றார்.

“நான் பெரிதாக எதிர்பார்ப்புக் கொள்ளவில்லை. அணித்தலைவராக செயற்பட நான் தகுதியானவன் என்று தேர்வுக்குழு தீர்மானித்தால், அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்” என்று டெஸ்ட் அணிக்கு நிரந்தர அணித்தலைமை பொறுப்பை ஏற்பது பற்றி கேட்கப்பட்டபோது கருணாரத்ன பதிலளித்தார்.

உள்ளூர் போட்டிகளில் சோபித்த ஓஷத பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய போன்ற இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு அசந்த டி மேல் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு நன்றி கூறிய இலங்கை கிரிக்கெட் சபையின் புதிதாக தெரிவான தலைவர் ஷம்மி சில்வா, சரியான அணி ஒன்றை தேர்வு செய்வதற்கு தேர்வுக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு தனது நன்றிகளை கூறினார்.

“எமது உள்ளூர் போட்டி அமைப்பு தரமானது இல்லை என்பது ஒரு கட்டுக்கதை. கழக மட்டத்தில் சோபித்த இந்த வீரர்கள் அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் ஆடினால் சர்வதேச மட்டத்திலும் அவர்களால் சோபிக்க முடியும்” என்று சில்வா மேலும் கூறினார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக எதிர்வரும் சவாலுக்காக லசித் மாலிங்க தலைமையிலான ஒருநாள் அணிக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

லஹிரு திரிமான்ன, கௌஷால் சில்வா, மிலிந்த சிறிவர்தன, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய மற்றும் மொஹமட் ஷிராஸ் ஆகியோரே இலங்கை திரும்பிய ஏனைய டெஸ்ட் குழாம் வீரர்களாவர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க