பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் இலங்கை சாதனை படைத்த ஹிருனி

179

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜயரட்ன, அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்ற ஹிருனி விஜயரட்ன, அமெரிக்காவின் மியூசிக் சிட்டி நெடுந்தூர மெய்வல்லுனர் தொடரில் (Music City Distance Carnival) பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் களமிறங்கினார்.

>>தேசிய மெய்வல்லுனரில் அமெரிக்கா வாழ் வீராங்கனை ஹிருனிக்கு தங்கம்<<

மின்னொளியின் கீழ் நடைபெற்ற குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 17.5 செக்கன்களில் நிறைவு செய்த அவர், புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்கவினால் நிலைநாட்டிய (16 நிமிடங்கள் 17.82செக்.) சாதனையை முறியடித்த அவர், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார். 

இந்த வெற்றி குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த அவர், 

இந்த வருடத்தில் சுவட்டில் ஓடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என நான் கருதவில்லை. ஆனாலும், அவ்வாறானதொரு சந்தர்ப்பம் என்னைத் தேடி வந்ததையிட்டு நன்றிகளை சொல்லாமல் இருக்கவும் முடியாது.

எனது இந்த வெற்றிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

>>இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு ஒரு கோடி ரூபா அனுசரணை<<

உண்மையில் கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு பயிற்சிகளை மேற்கொண்டது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பல்வேறு தியாகங்களைச் செய்தாவது இலங்கையின் தேசிய கொடியை மீண்டும் வானில் பறக்கவிடச் செய்தமையையிட்டு பெருமையடைகிறேன் என குறிப்பிட்டார்.

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு முதல் தடவையாக வந்த அவர், பெண்களுக்கான 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். 

இதில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியை 35 நிமிடங்கள் 30.0 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், மறுநாள் நடைபெற்ற பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள் 54.9 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

>>பெண்களுக்கான மரதனில் புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி<<

இதனையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் களமிறங்கிய ஹிருனி, அதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக இடைநடுவில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். 

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக களமிறங்கிய அவர், பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் 4 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

எனினும், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமையைத் தேடிக் கொடுத்தார்.

35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கமாக அது பதிவாகியது.

>>கத்தாரில் மரதன் ஓட்டத்தை இடைநடுவில் நிறுத்திய ஹிருனி<<

எனவே கொவிட் – 19 வைரஸ் காரணமாக தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்ற ஹிருனி விஜயரட்ன, அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<