தேசிய மெய்வல்லுனரில் அமெரிக்கா வாழ் வீராங்கனை ஹிருனிக்கு தங்கம்

176

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன, கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இன்று (17) நடைபெற்ற பெண்ளுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வசித்துவரும் ஹிருனி விஜேரத்ன, தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றுவதற்காக கடந்த வாரம் இலங்கை வருகை தந்தார். 

இதன்படி, 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாம் நாளான இன்று (17) காலை நடைபெற்ற பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹிருனி விஜேரத்ன களமிறங்கினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை 35 நிமிடங்கள் 30.0 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். 

இலங்கை மண்ணில் முதல்தடவையாகக் களமிறங்கி தங்கப் பதக்கத்தை வென்றமை குறித்து போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு ஹிருனி விஜேரத்ன வழங்கிய செவ்வியில்,

“இலங்கையில் நடைபெறுகின்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டும் என நீண்ட நாள் காத்திருந்தேன். உண்மையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் டோஹாவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு தயாராகவுள்ளேன். அதேபோல, சுவட்டிலும் ஒருசில ஓட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருந்தேன். அதற்கான முயற்சியாகவே நான் இந்தத் தொடரில் பங்குபற்ற வந்தேன். 

மறுபுறத்தில் எனது வாழ்க்கையில் ஒருபோதும் இலங்கையில் உள்ள வீராங்கனைகளுடன் போட்டியிட்டது கிடையாது. அத்துடன், எனக்கு இந்தப் போட்டியில் ஒரேயொரு வீராங்கனைதான் போட்டியையும் கொடுத்திருந்தார். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனவே இந்த வெற்றியின் மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்றுக் கொடுப்பேன்” என தெரிவித்தார். 

பெண்களுக்கான மரதன் மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான ஹிருனி விஜேரத்ன, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜேர்மனியின் டஸல்டோர்ப் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை ஏற்கனவே பெற்றுக்கொண்ட ஹிருனி விஜேரத்ன, 2017ஆம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதுஇவ்வாறிருக்க, நாளை (18) நடைபெறவுள்ள பெண்களுக்கான 5 ஆயிரம் போட்டியிலும் ஹிருனி விஜேரத்ன களமிறங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹிருனிக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இலங்கை விமானப் படையைச் சேர்ந்த என்.எல் ஆரியதாஸ (35 மணி. 42.3 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த லேகம்கே (36 மணி. 52.8 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<