ஹெட், சிராஜிற்கு அபாரதம் வழங்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC)

71

இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ் மற்றும் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருக்கு, இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அபாரதம் வழங்கப்பட்டுள்ளது.

>>சமநிலை அடைந்த இலங்கை – பங்களாதேஷ் இளையோர் அணிகளின் மோதல்

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் அடிலைட்டில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் முதல் துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது 82ஆவது ஓவரில் ட்ராவிஸ் ஹெட்டினை மொஹமட் சிராஜ் தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கச் செய்ததோடு, ஹெட் ஆட்டமிழந்த பின்னர் சிராஜ் ஹெட்டினை அவுஸ்திரேலிய வீரர்களின் உடைமாற்றும் அறைக்குச் செல்லும் வகையில் சைகை காட்டியிருந்தார்.

ஹெட் – சிராஜ் இடையில் நடைபெற்று முடிந்த இந்த நிகழ்வின் காரணமாகவே இரண்டு வீரர்களுக்கும் அபாரதம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரண்டு வீரர்களுக்கும் நன்னடத்தை விதிமீறல் புள்ளிகள் தலா ஒன்று வீதம் வழங்கப்பட்டிருப்பதோடு, இதற்கு மேலதிகமாக மொஹமட் சிராஜிற்கு அவரது போட்டிக்கட்டணத்தில் 20% மேலதிக அபாரதமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இரண்டு வீரர்களும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டிருப்பதன் காரணமாக அவர்கள் மீது மேலதிக விசாரணைகள் நடாத்தப்படாது எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<