T20 உலகக் கிண்ணம் சாத்தியமா? ; வரலாற்றின் பலத்துடன் களமிறங்கும் இலங்கை!

290

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ள தயாராகிவருகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணி 2015 தொடக்கம் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு மோசமான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், சர்வதேச தரத்துக்கு மீண்டெழுமா? என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.

T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!

இவ்வாறான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்றிருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆசிய சம்பியனாக இலங்கை முடிசூடியிருந்தது.

அனுபவ வீரர்களின் முக்கியத்துவத்தை கருதியிருந்த இலங்கை அணி, பிரமோத் விக்ரமசிங்க தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்ட பின்னர், இளம் வீரர்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது.

இளம் வீரர்கள் மற்றும் தசுன் ஷானகவின் தலைமைத்துவத்தின் கீழ் பயணிக்க தொடங்கிய இலங்கை அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்திருந்தது. இந்த தொடரில் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தது.

அதனைத்தொடர்ந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கை அணி, மீண்டும் தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளை பயிற்சிப் போட்டிகளில் எதிர்கொண்டதையடுத்து  நமீபியா அணியை முதல் போட்டியில் இலங்கை எதிர்கொள்கிறது.

இலங்கை முதல் சுற்றில்  நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்த குழுவில் முதலிரண்டு இடங்களை பிடித்துக்கொள்ளும் பட்சத்தில் சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இலங்கை அணிக்கு முதல் சுற்றுப்போட்டிகள் மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளன.

இலங்கையின் T20 உலகக் கிண்ண வரலாறு

இலங்கை கிரிக்கெட் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்த தவறியிருந்தபோதும், T20 உலகக் கிண்ண வரலாற்றை பொருத்தவரை அசைக்கமுடியாத அணியாக இருந்திருக்கிறது.

இந்தியாவை வீழ்த்தி 2014ஆம் ஆண்டு சம்பியனாக மாறியிருந்ததுடன், 2019 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதன்மூலம் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 3 தடவைகள் தகுதிபெற்ற ஒரே அணியென்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.

அதேநேரம் T20 உலகக் கிண்ணத்தில் அதிக வெற்றிகளை ஈட்டிய அணியாகவும் இலங்கை தங்களை  அடையாளப்படுத்தியிருக்கிறது. மொத்தமாக 43 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 27 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் 24 போட்டிகளிலும், இந்தியா 23 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, இந்த T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கக்கூடிய வீரராக மாறியுள்ளார்.

சுழல் பந்துவீச்சின் மூலமாக எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுத்துவந்த இவர், T20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் தூர பௌண்டரி எல்லைகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு இவருக்கு அதிகமாக உள்ளது.

அதுமாத்திரமின்றி மத்தியவரிசையில் களமிறங்கக்கூடிய இவர் துடுப்பாட்டத்திலும் முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடக்கூடியவர். எனவே, இவரது பிரகாசிப்பு அணியின் முடிவுகளுக்கு முக்கியமானதாகும்.

வனிந்து ஹஸரங்கவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க. இவரின் துடுப்பாட்டம் மற்றும் குசல் மெண்டிஸ் உடனான ஆரம்ப இணைப்பாட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடன் பானுக ராஜபக்ஷவின் வேகமான ஓட்டக்குவிப்பு, துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோரின் வேகமும் அணிக்கு முக்கியத்துவமான விடயமாகும்.

இலங்கை குழாம்

இலங்கை T20 குழாத்தை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர்களாக அணித்தலைவர் தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா இணைக்கப்பட்டுள்ளனர்.

வேகப் பந்துவீச்சை பொருத்தவரை துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதைக்கு பின்னர் திரும்பியுள்ளதுடன், டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுசான் ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். சுழல் பந்துவீச்சுக்கு வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரால் பங்களிப்பை வழங்கமுடியும் என்பதுடன், மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுசான், லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே

இறுதியாக…

நீண்டகாலமாக வளர்ந்துவருகின்ற அணி, வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இருக்கும் அணி என இலங்கை அணி தொடர்பில் பேசப்பட்டுவந்தது. அவ்வாறான நிலையில் தற்போது இலங்கை அணி முழுமை அடைந்துள்ளது என்ற கருத்துகளும் பரவலாக உள்ளன.

உண்மையில் இலங்கை அணி முழுமையடைந்துவிட்டதா? என்றால் ஒருசில கேள்விகள் இருக்கதான் செய்கின்றன. மத்தியவரிசை துடுப்பாட்டத்தின் பலவீனம், வேகப் பந்துவீச்சின் அனுபவக்குறைவு மற்றும் சமீர, குமாரவின் உபாதையின் பின்னரான வருகை போன்ற விடயங்கள் இருக்கின்றன.

ஆனால் நாம் கடந்தகாலங்களாக பார்த்த இலங்கை அணியைவிடவும், தற்போது நம்பிக்கையின் அடிப்படையிலும், வீரர்களின் ஒற்றுமையின் அடிப்படையிலும் ஒரு அணியாக இலங்கை பலம் பெற்றிருக்கிறது. ஆசியக் கிண்ணத்தின் வெற்றி அவர்களுக்கு மேலும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வீரர்களும் அணிக்காகவும், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் புன்னகையை கொடுக்க எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களுடைய இந்த எதிர்பார்ப்புகள், ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்பன இந்த உலகக் கிண்ணத்தில் இலங்கையை அணியை நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<