T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ஹர்திக் பாண்டியா

Asia Cup 2022

98

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20I வீரர்கள் தரவரிசையின் படி, இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா தனது வாழ்நாள் அதியுயர் முன்னேற்றத்துடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் சுபர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா துடுப்பாட்டத்தில் 33 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் பேரவை T20I போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று (31) வெளியிட்டது.

இதில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த ஹர்திக் பாண்டியா, ஐசிசி இன் புதிய T20I சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி முதல்முறையாக ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டு முற்பகுதியில் நடைகெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

மறுபுறத்தில் இதுவரை 14 சர்வதேச T20I போட்டிகளில் ஆடியுள்ள அவர் 33.88 என்ற சராசரியுடன் 314 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி T20I போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியை பதிவு செய்த அவர்,  மேலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, குறித்த 14 T20I போட்டிகளில் மூன்றில் இந்திய அணியின் தலைவராகச் செயல்பட்ட அவர், அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மற்றொரு போட்டியிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐசிசி இன் T20I சகலதுறை வீரர்களுக்கான முதல் 4 இடங்களில் முறையே மொஹமட் நபி (ஆப்கானிஸ்தான்), சகிப் அல் ஹசன் (பங்காளதேஷ்), மொயின் அலி (இங்கிலாந்து), கிளென் மெக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ரஷித் கான் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிரெண்டு இடங்களில் அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட்டும், தென்னாப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷாம்ஷியும் உள்ளனர். இதேபோன்று மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து 8ஆவது இடத்தில் நீடிக்கிறார் .

இதேவேளை, T20I துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்தவொரு மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், மொஹமட் ரிஸ்வான் 2ஆவது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்திலும் தொடருகிறார்கள்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<