ஆசியக் கிண்ணத்தில் இலங்கை – பங்களாதேஷ் மோதும் நொக்-அவுட் போட்டி!

Asia Cup 2022

508

ஆசியக் கிண்ணத் தொடருக்கான குழு Bயின் முக்கியமான போட்டியில், இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியை வியாழக்கிழமை (01) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆசியக் கிண்ணத்தில் களமிறங்கிய போதும், மோசமான துடுப்பாட்டம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்து சுபர் 4 சுற்றுக்கு முன்னேறுவதில் இலங்கை அணி நெருக்கடியை சந்தித்திருந்தது.

>> தசுனின் கருத்துக்கு மைதானத்தில் பதிலடி கொடுக்கவுள்ள பங்களாதேஷ்

எனினும் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கொண்டதன் மூலம், இலங்கை அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

இதன்மூலம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதுடன், தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரை ஆசியக் கிண்ணத் தொடரில் களமிறங்கும்போது, துடுப்பாட்டத்தை முழுமையான பலமாகக்கொண்டு களமிறங்கியிருந்தாலும், முதல் போட்டியில் வெறும் 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அத்துடன், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு தேவையான பிரகாசிப்புகளை சரியாக வழங்கியிருக்கவில்லை.

அதுமாத்திரமின்றி முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் உபாதைகள் காரணமாக அனுபவம் குறைந்த வேகப் பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுசங்க மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

இவ்வாறு அனுபவம் குறைந்த வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடும் இலங்கை அணிக்கு, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் பக்கமிருந்து சாதகமான பங்களிப்பு கிடைத்தால் இலங்கை அணியால் வெற்றிபெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை கடந்த சில தொடர்களாக அவர்களுடைய பிரகாசிப்பு சற்று வீழ்ச்சியை கண்டிருப்பது. எனினும், புதிய தலைவராக சிரேஷ்ட மற்றும் அனுபவ வீரர் சகீப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டு அவரின் கீழ் ஆசியக் கிண்ணத்தில் விளையாடிவருகின்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஆரம்ப ஓவர்கள் மற்றும் மத்திய ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

எனினும், அவர்களுடைய இறுதி ஓவர்களுக்கான பந்துவீச்சில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே, முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தனர். எனவே, இந்தப் போட்டியில் குறிப்பிட்ட இந்த விடயங்களை தவிர்த்துக்கொண்டு விளையாடினால், போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்தகால மோதல்கள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இதுவரையில் 12 T20i போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை அணி 8 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலக்கிண்ணத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருந்தது. T20i போட்டிகளை பொருத்தவரை பங்களாதேஷ் அணியைவிட, இலங்கை அணி இருதரப்பு தொடர்களில் அதிக ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது.

அதேநேரம். ஆசியக் கிண்ணத்தின் ஒட்டுமொத்த பிரகாசிப்புகளை பார்க்கும்போதும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 13 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 11 வெற்றிகளையும், 2  தோல்விகளையும் சந்தித்துள்ளது. குறிப்பாக இறுதியாக 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்த இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு வீரர்

பானுக ராஜபக்ஷ – இலங்கை

இலங்கை அணியில் இந்த ஆசியக் கிண்ணத்தை பொருத்தவரை அதிகம் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக பானுக ராஜபக்ஷ உள்ளார்.

பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தாலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிகமான லீக் தொடர்களில் பானுக ராஜபக்ஷ விளையாடியுள்ளார். அதனால், ஆடுகளங்கள் தொடர்பில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளதால் ஓட்டங்களை இலகுவாக குவிக்கக் கூடியவராக அவர் உள்ளார்.

இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் முக்கியமான அரைச்சதம் ஒன்றை பானுக ராஜபக்ஷ பெற்றிருந்தார். அதுமாத்திரமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முன்னணி வீரர்கள் ஓட்டங்களை பெறத்தவறியிருந்த போதும், பானுக ராஜபக்ஷ சிறப்பாக ஆடி 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார். எனவே, இந்தப்போட்டியிலும் அணிக்காக துடுப்பாட்டத்தில் பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முஷ்பிகுர் ரஹீம் – பங்களாதேஷ்

இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் ஓட்டங்களை குவிக்கும் பங்களாதேஷ் வீரர்களில் முஷ்பிகுர் ரஹீம் முக்கிய வீரராக இருக்கிறார். கடைசியாக நடைபெற்ற போட்டி முடிவுகளும் முஷ்பிகுர் ரஹீம் இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் வீரர் என்பதை காண்பித்திருக்கின்றன.

இலங்கை அணிக்கு எதிராக 10 T20i போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3 அரைச்சதங்கள் அடங்கலாக 296 ஓட்டங்களை (சராசரி 42.28) குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி 149.49 என்ற ஓட்ட வேகத்தையும் இலங்கைக்கு எதிராக கொண்டுள்ள இவர், நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணிக்கு  கூடுதல் அச்சுறுத்தல் கொடுக்கும் துடுப்பாட்ட வீரராக இருக்கக்கூடும்.

உத்தேச பதினொருவர்

இலங்கை – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க/அஷேன் பண்டார/தனன்ஜய டி சில்வா, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க, மதீஷ பதிரண/அசித பெர்னாண்டோ

பங்களாதேஷ் – மொஹமட் நயீம், அனாமுல் ஹக், சகீப் அல் ஹஸன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், அபீப் ஹொஸைன், மஹ்முதுல்லாஹ், மொசடக் ஹொஸைன், மெஹிதி ஹஸன், மொஹமட் சய்புதீன், டஸ்கின் அஹ்மட், முஷ்தபிசூர் ரஹ்மான்

இறுதியாக…

ஆசியக் கிண்ண வரலாற்றை பொருத்தவரை இலங்கை அணி இந்தியாவுக்கு (7 தடவைகள்) அடுத்தப்படியாக அதிக தடவைகள் கிண்ணத்தை வென்ற (5 தடவைகள்) அணியாக உள்ளது.

பங்களாதேஷ் அணி இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை. எனினும், கடந்த 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை அணி முதல் சுற்றிலிருந்து வெளியேறியிருந்தது.

இம்முறையும் அதேபோன்றதொரு நிலை உருவாகியுள்ளது. புதிய வீரர்களுடன் நம்பிக்கை தந்துகொண்டிருந்த இலங்கை அணி, முதல் போட்டியில் தோல்வியடைந்து மீண்டும் பின்னடைவை காட்டியுள்ளது.

எனினும், மீண்டும் தங்களை பலமான அணியாக காட்டிக்கொள்ள இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. எனவே, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கும் இலங்கை அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<